தொடரும் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு! அதிரடி காட்டும் தி.மு.க. தலைவர்

slider அரசியல்
mks

 

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று  பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் திருச்சி, சேலம், நாமக்கல்லில் செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மாற்றங்களின் மூலம் நிரூபணமுமானது. இதில் இப்போது தருமபுரி மாவட்டமும் சேரும் என்று தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து தி.மு.க. முகாமில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரை அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க.வை பத்தாண்டுக்குப் பின்பு மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரவேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்காகத்தான் தேர்தல் ஆலோசகராக பிரபலமான பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார். குறிப்பாக, மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானவற்றில் இளைஞர்களை நியமிக்க முடிவெடுத்து செயல்படுத்தியும் வருகிறார். இதன் முதல்கட்ட நடவடிக்கை தான் திருச்சி, சேலம் நாமக்கலில் அவர் மேற்கொண்ட நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக ஸ்டாலின் அடுத்து மேற்கொள்ளவுள்ள மாவட்டம் தருமபுரி என்று தகவல் வந்துள்ளது. தருமபுரியில் இப்போது மாவட்டச் செயலாளராக  இருப்பவர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ.  இவர் சொல்லிக்கொள்ளும் வகையில் பெரிதாக செயல்படவில்லை என்றும், அ.தி.மு.க.வுடன் சுமூக உறவு பேணுவதாகவும் கட்சித் தலைமைக்கு பல புகார்கள்  தருமபுரி மாவட்ட தி.மு.க.வினரிடமிருந்து சென்றிருக்கிறது. மேலும், முன்னாள் அமைச்சரும் மாவட்டத்தில் பிரபலமானவருமான முல்லை வேந்தன் தி.மு.க.வில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு நீக்கப்பட்டதால் வேறு வழியின்றி தடங்கம் சுப்பிரமணியன் தற்காலிக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் எப்படியோ மாவட்டச் செயலாளராக மாறி தனது பதவியை அவர் தக்க வைத்துக்கொண்டார் என்றும் தருமபுரி மாவட்ட உடன்பிறப்புகள் சொல்கிறார்கள்.

இந்நிலையில் தருமபுரி மக்களவை உறுப்பினராகவுள்ள செந்தில்குமார் மக்கள் பணிகளில் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகிறார். இவரைப்பற்றி  தி.மு.க. தலைமைக்கு எந்தப் புகாரும் இதுவரை சென்றதில்லை. மேலும், பா.ம.க.வின் கோட்டையாக கருதப்படும் தருமபுரியில் அந்தக் கட்சியை எதிர்த்து சமரசமின்றி அரசியல் செய்ய தகுதியானவர் செந்தில்குமார் எம்.பி. என்பதால் அவருக்கு விரைவில் மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்கக்கூடும் எனவும் தி.மு.க. தலைமைக் கழக வட்டாரத்தை மேற்கோள் காட்டி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலைஞர் மாவட்டச் செயலாளர்கள் விஷயத்தில் பின்பற்றிய அணுகுமுறைக்கு எதிரான நடவடிக்கையை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். இதன் வெற்றி, தோல்வி என்பது அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தெரியவரும் என்கிற பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிரமாகியுள்ளது.

  • விசாகன்