குற்றப் பின்னணி வேட்பாளர்கள்! அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!

slider அரசியல்

 

 

 

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க., மட்டுமல்லாது மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. என்று பல கட்சிகளும் அடங்கும். இந்த விஷயத்தில் 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கு ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் சரியாக நடைமுறைபடுத்தவில்லை. இந்நிலையில் இதில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து தோ்தலிலும் போட்டியிடும் வேட்பாளா்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது சுயேச்சை வேட்பாளர்களால இருந்தாலும் சரி, அவர்கள் தங்களது குற்றப் பின்னணி தொடா்பான தகவல்களைத் தோ்தல் ஆணையத்திடமும், பொது வெளியிலும் அதாவது ஊடகம் வழியிலும் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு கடந்த 2018-ம் ஆண்டு  ஓர் உத்தரவை பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவு முறையாகக் கடைபிடிக்கப்படவில்லை. இதனை முன்னிட்டு மத்திய அரசு, தோ்தல் ஆணையம் ஆகியவற்றின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக்கோரி பா.ஜ.க. தலைவரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மீதான விசாரணையை நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது .

இந்நிலையில் இந்த மனு மீது நேற்று (12.2.2020) நீதிபதிகள் உத்தரவு  பிறப்பித்தனர். அந்த உத்தரவில் “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை 48 மணிநேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய இணைய தளத்தில் வெளியிட  வேண்டும். மேலும், பிராந்திய நாளேடுகளிலும், சமூக வலைத்தளங்களலும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து 72 மணிநேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தேர்தலில் போட்டியிட குற்றப் பின்னணி உடையவர்களுக்கு வாய்ப்பு தந்தது ஏன் என்பதையும் அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும்’’ என்று அந்த உத்தரவில் கூறியுள்ளது.

மேலும், குற்றப் பின்னணியுடைய வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு பொதுத் தேர்தல்களில் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அறிவிக்காத கட்சிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவு பல கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனநாயகத்தின் முக்கியமான ஒன்றை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இன்றும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அதிகளவு மக்களிடம் இருந்து வருகிறது. ஆட்சியிலும், கட்சியிலும் இதை நடைமுறைப்படுத்துவதையே எல்லோரும் விரும்புவர். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. தி.மு.க. போன்ற கட்சிகள் மத்தியில், மாநிலத்தில் ஆளுங் கட்சியாக இருந்த கட்சிகளாகும். இப்போது இருந்துவரும் கட்சிகளாகும். இந்தக் கட்சிகளுக்கும் சேர்த்துதான் உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. பெருவாரியான மக்களை தங்கள் ஆதரவாளராக கொண்ட இக்கட்சிகளிலிருந்து இந்த நல்ல காரியம் தொடங்கப்படுவதை இந்தக் கட்சியின் ஆதரவாளர்களும் விரும்புவே செய்வார்கள்.

 

தொ.ரா.ஸ்ரீ.