இருபது ஓவர்களில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு – யுவராஜ் சிங்

slider விளையாட்டு

 

இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது. மேலும், கோடைக் காலத்தில் இந்தியாவில் பிரபலமான ஐ.பி.எல். போட்டிகளும் நடைபெறவுள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டி-20 போட்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் ஐம்பது ஓவர்கள் ஆட்டத்திலும், டி-20 ஆட்டத்திலும் கலக்கிய யுவராஜ் சிங் தற்போது டி-20 ஆட்டங்களில் இரட்டை சதம் அடிக்கப்படுவது குறித்து பேசியிருக்கிறார். இது கிரிக்கெட் உலகில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ்சிங் கடந்த 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்சர்களை அடித்து முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 20 ஓவர் சர்வதேச போட்டியில் 12 பந்தில் அரை சதத்தை அடித்து சாதனை புரிந்தவர்.

சமீபத்தில் டி-20 ஆட்டங்கள் குறித்து தனது எண்ணங்களையும், கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘’20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆகவே, சாத்தியமில்லை என்று என்னால் சொல்ல முடியும்.  ஆனால், சமீபமாக நடைபெற்று வரும் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும்போது முடியாதது எதுவுமில்லை. ஆகவே காத்திருப்போம்.. சிறந்ததை எதிர்பார்ப்போம். கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.   இந்த இருவராலும் 20 ஓவர் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க இயலும். அதோடுமூன்றாவது  நபராக ரோகித் சர்மாவாலும் இரட்டை சதம் அடிக்க முடியும்’’ என்று கூறியுள்ளார்.

குறிப்பாக, இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மா நான்கு சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்தவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்  ஆரோன் பிஞ்ச். இவர் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 172 ரன் குவித்து இருந்தார்.   ஐ.பி.எல். போட்டியில் கிறிஸ்கெய்ல் அதிக பட்சமாக 179 ரன் குவித்துள்ளார்.