இனிமேல் தான் அதிரடியே ஆரம்பமாகவுள்ளது – பிரதமர் மோடி அதிரடி பேச்சு!

slider அரசியல்

 

 

கடந்த மோடி ஆட்சியிலும் வரி விதிப்பு முறையில் அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது பா.ஜ.க அரசு. அதேநேரத்தில் வரி ஏய்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதன்மூலம் தொழில் துறை சார்ந்தவர்கள் மற்றும் தொழில்துறை சாராத மற்றவர்களும் வருமான வரியை செலுத்துவதில் ஆரவம் காட்டினார்கள். இப்போது இந்த ஆட்சியிலும் வரி விஷயத்தில் இன்னும் அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இதுவரை இந்தமுறை ஆட்சியில் எடுக்கப்பட்டவை வெறும் சாம்பிள் தான் என்றும், இனிமேல் தான் ஆக்‌ஷனே ஆரம்பமாக போகிறது என்று பிரதமர் மோடி தற்போது பேசியிருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று (12.2.2020) டைம்ஸ் நவ் பத்திரிகை ‘இந்தியா செயல் திட்டம் 2020’ என்னும் தலைப்பில் ஒரு மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது, “தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தை மனதில் வைத்து நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வரிகளை நேர்மையாக செலுத்துவதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 1.5 கோடி கார்கள் விற்கப்பட்டது. மேலும், மூன்று கோடிக்கும் அதிகமானோர் வணிகத்திற்காக அல்லது ஓய்வுக்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். நாடு முழுவதும் வக்கீல்கள், மருத்துவர்கள் மற்றும் ஆடிட்டர்கள் என பல தொழில் வல்லுநர்கள் உள்ளனர். ஆனால் 2,200 தொழில் வல்லுநர்கள் மட்டுமே ஆண்டு வருமானத்தை 1 கோடிக்கு மேல் உள்ளதாக அறிவித்தனர். எனவே, இந்த விஷயத்தில் பொய்க் கணக்கு காண்பித்தோர் பலர் விரைவில் உச்சநீதிமன்றத்தை சந்திப்பார்கள். மக்கள் விடுமுறைக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதையும், அவர்கள் விரும்பும் கார்களை வாங்குவதையும் பார்க்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், வரி செலுத்தும் எண்ணம் இல்லாததை காணும்போது அது எனக்கு கவலை அளிக்கிறது.

வரி துன்புறுத்தல் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயமாக இருக்கும். இப்போது இந்தியா தொழில்நுட்ப உதவியுடன் வரி ஊக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வரி நிர்வாகம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர்களை அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளின் கிளப்பில் இந்தியா நுழைந்துள்ளது. நமது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நாம் 2022 ஆம் ஆண்டில் கொண்டாடுவோம். உங்களின் தனிப்பட்ட நோக்கங்களை இந்த மாபெரும் சந்தர்ப்பத்துடன் சீரமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளாதார வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுக்க சிறிய நகரங்களில் கவனம் செலுத்துவது இதுவே முதல்முறை.

இனியும் நம் நாடு நேரத்தை வீணடிக்காது. நம்பிக்கையுடன் முன்னேறும். ஐந்து லட்சம் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை எட்ட இந்த பட்ஜெட் உதவும். கடந்த எட்டு வருடங்களில் பல சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்துள்ளோம். நடுத்தர வர்க்கத்திற்கு சிறப்பு நிதியம் உருவாக்கியது, சீட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தியது, குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகளை தடுக்க சட்டத்தை கடுமையாக்கியது, முத்தலாக் தடை சட்டம், கார்ப்பரேட் வரி குறைப்பு, ரபேல் விமானம் வாங்கியது, ராமர் கோவில் கட்டுதல், குடியுரிமை திருத்த சட்டம் என பல முக்கிய முடிவுகளை எங்களது அரசு எடுத்துள்ளது. இவை எல்லாம் வெறும் சாம்பிள் தான். இனிமேல் தான் உண்மையான ஆக்‌ஷனே ஆரம்பிக்க போகிறது.

இதுபோன்ற எண்ணற்ற முடிவுகளை இடைவிடாமல் என்னால் எடுக்க முடியும். அவைகள் வெறும் சதமாக இருக்காது. இரட்டை சதமாக இருக்கும். உங்கள் உச்சி மாநாட்டின் கருப்பொருள் இந்தியா செயல் திட்டம் 2020 ஆகும். ஆனால், இந்தியா இப்போது முழு பத்து ஆண்டுகளுக்குமான செயல் திட்டங்களில் செயல்பட்டு வருகிறது. ஆம். டி -20 பாணி வடிவமைப்புடன் செயல்திட்டங்கள் இருக்கும். ஆனால், நிலையான செயல்திறனை உறுதிசெய்தல், புதிய பதிவுகளை உருவாக்குதல் மற்றும் தயாரிப்பது என இது இந்தியாவின் தொடராக இருக்கும். உலகின் மிக இளைய நாடு மிக வேகமாக விளையாடும் மனநிலையில் உள்ளது!’’ என்று மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தொழில் சார்ந்த ஒரு கருத்தரங்கில் பேசிய பேச்சில் அதிகம் வரித்துறை சார்ந்த விஷயங்களையே பேசியிருந்தபோதும், கடைசியாக பேசிய பேச்சுகளான இதுவரை எடுக்கப்பட்டவை வெறும் சாம்பிள் தான் என்பதும், இனிமேல் தான் ஆக்‌ஷனே ஆரம்பமாகப் போகிறது என்கிற பேச்சுக்களில் தொழில் மற்றும் வரி சம்பந்தபடாத சங்கதிகளும் அடங்கியிருக்கலாம் என்றும் அவை கறுப்பு பண மீதான கடும் நடவடிக்கையில் ஆரம்பித்து பொது சிவில் சட்டம் வரைக்கூட இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

  • குருபரன்