அமித்ஷா மீது வருத்தத்தில் மோடி

slider அரசியல்
modi-amithsha

டெல்லி யூனியன் சட்டசபை தேர்தலில் இந்தமுறை பா.ஜ.க. தான் ஆட்சி அமைக்கப் போவதாகவே பா.ஜ.க. தேசிய தலைமை எண்ணியது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 250க்கும் மேற்பட்ட பா.ஜ.க. எம்.பி.க்கள் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறக்கப்பட்டனர். பிரதமர் மோடியை டெல்லி மாதிரியான சின்ன ஏரியாவில் அதிகளவு பயன்படுத்துவது இல்லை என்றும் கட்சியின் தேசிய தலைமை முடிவெடுத்திருந்தது. இதனால், டெல்லியின் வெற்றிப் பொறுப்பு அமித்ஷா வசம் தரப்பட்டது. இதில் பெரும் தோல்வியை கண்டுவிட்டது. இதனால் அமித்ஷா மீது தேசிய தலைமையும், பிரதமர் மோடியும் வருத்தத்தில் இருப்பதாக பா.ஜ.க. முகாமில் பேச்சுக்கள் எழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி யூனியன் தேர்தல் முடிவுகள் 11.2.2020 அன்று  வெளியானது. இதில் 63 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பா.ஜ.க. ஏழு இடங்களில் வென்றிருக்கிறது. வெறும் ஏழு இடங்களில் மட்டும் வென்றது அக்கட்சியின் தேசிய தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியிலிருந்தே கட்சி நிர்வாகிகள் யாரிடமும் அமித் ஷா பேசவே இல்லையாம்.  இந்த படுதோல்வியை அமித்ஷா எதிர்பார்க்காததே இதற்குக் காரணமாம். குறைந்தபட்சம் 20 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வெற்றிபெறும் என்று அமித்ஷா எண்ணியிருந்தாராம். இதன் விளைவாக நேற்று 11.2.2020 அன்று டெல்லியை சேர்ந்த ஏழு பா.ஜ.க. எம்.பி.க்களை சந்திக்கவிருந்த ஆலோசனைக் கூட்டத்தைகூட கூட அமித்ஷா ரத்து செய்துவிட்டாராம். மேலும், தேர்தல் தோல்வியை அறிந்ததிலிருந்து அமித்ஷா எங்கும் செல்லவில்லையாம்.  கட்சித் தலைவர் ஜே. பி. நட்டாவிடம் மட்டும்  அமித்ஷா தேர்தல் தோல்வி குறித்து கொஞ்சநேரம் பேசினார் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு இப்படித்தான் தேர்தல் முடிவுகள் வரவிருப்பதாக மத்திய உளவுத்துறை முன்கூட்டியே சொன்னதாகவும், மேலும் அதிக பிரசாரக் கூட்டங்களில் கலந்துக் கொண்டால் உங்கள் இமேஜ் அடிபடவும் வாய்ப்பிருப்பதாகவும் உளவுத்துறை சொன்னதால் தான் மோடி ஒரே ஒரு கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டார் என்றும் இப்போது டெல்லியில் இந்தத் தேர்தல் முடிவு குறித்து பின்னணி தகவல்கள் வரத் தொடங்கியுள்ளது என்றும், இந்த படுதோல்வி முன்னிட்டு அமித்ஷா மீது மோடிக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும்கூட அந்த தகவல்கள் கூறுகின்றன என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • குருபரன்