காங்கிரஸை விமர்சித்த குஷ்பு!

slider அரசியல்

 

Kushboo-

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இன்றும் மீடியாக்களில் பல்வேறு ஷோக்களை நடத்தி வருகிறார். இவருக்கென்று ரசிகர் வட்டாரம் இன்றும் உண்டு. நடிகை குஷ்புவின் பல பேச்சுக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. முன்பு தி.மு.க.வில் இருந்தார் குஷ்பு. இப்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். தற்போது டெல்லியில் காங்கிரஸ் பெற்ற படுதோல்வி குறித்து குஷ்பு பதிவிட்டுள்ள டுவிட்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஓர் இடம் கூட பெறாமல் காங்கிரஸ் படுதோல்வி தோல்வியடைந்திருக்கிறது. அங்குள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களையும், பா.ஜ.க. 8 இடங்களையும் பெற்றுள்ளன. ஆம் ஆத்மியின் தலைவர் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக அங்கு முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

தேசியக் கட்சியான காங்கிரஸின் இந்த படுதோல்வி குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’டெல்லியில் காங்கிரஸுக்காக எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் மீண்டும் அழிக்கப்பட்டுள்ளது. நாம் போதுமானதை செய்கிறோமா, நாம் சரியானதை செய்கிறோமா, நாம் சரியான பாதையில் இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றே பெரிதாக பதில் வரும். நாம் இப்போதே பணியைத் தொடங்க வேண்டும். இப்போது இல்லை என்றால் எப்போதும் முடியாது. அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும்.

ஆனால், மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடி மற்றும் அமித்ஷா அராஜகக் கும்பலை நிராகரித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி. எல்லா தோல்விகளுக்குப் பிறகும் செய்வதை போல நடந்ததை மறுபார்வை பார்க்க இப்போது நமக்கு நேரம் இல்லை. ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் நாம் அப்படி செய்வதில்லை. ’நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறி விடு’ என்ற மகாத்மாவின் வார்த்தைகளை எடுத்துக் கொண்டு நாம் செயல்பட வேண்டும். நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும்”  என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

இந்த டிவிட்டர் பதிவுக்கு டிவிட்டரில் ஒருவர், “அரசியல் என்பது 24 மணி நேரத்துக்கான பணி. ஆனால், உங்கள் கட்சிக்கு மூர்க்கத்தனம் இல்லை. வீரியமான செயல்பாடு இல்லை. தெளிவான பார்வையும் இல்லை” என்று சரமாரியாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். இதற்கு உடனடியாக குஷ்பு, “ஒப்புக் கொள்கிறேன்” என்று பதில் பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்புவின் இந்த ட்விட்டர் பதிவிலிருந்து அவரின் அடுத்த அரசியல் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அறியமுடியாதபடியே இருக்கிறது. ஆனாலும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கக்கூடியவர் கட்சியின் தோல்வியை பொதுவெளியில் இப்படி விமர்சிப்பதை தேசியக் கட்சியான காங்கிரஸின் சட்டவிதிகள் அனுமதிக்கும் என்று சொல்ல முடியாது. இந்த ட்விட்டருக்கான பின்விளைவுகள் இன்னும் கொஞ்சநாளில் என்னெவென்று தெரிய வரலாம்.

– எம்.டி.ஆர்.ஸ்ரீதர்