ரஜினி குறித்து ராமதாஸிடம் என்னமோ திட்டமிருக்கு!

slider அரசியல்
ramadass-rajinikanth

 

சில தினங்களுக்கு முன்பு ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழருவி மணியன் கொடுத்த பேட்டி தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்தப் பேட்டி முன்னிட்டு தமிழருவி மணியன் மீது அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் பெருமளவில் கோபப்பட்டு பேசினார். இப்போது பா.ம.க. தலைவர் ராமதாஸ், தமிழருவி மணியன் பேச்சுக்கு அர்த்தம் விளங்காத வகையில் பதிலளித்திருப்பதால், இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்திய மக்கள் தலைவரும், ரஜினியின் ஆதரவாளர் போல் பேசிவரும் தமிழருவி மணியன் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் தமிழருவி மணியன், “நடிகர் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவார்.  தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதா வேண்டாமா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. பா.ம.க.வுடன் ரஜினி கூட்டணி வைப்பார். ஆனால், அ.ம.மு.க.வுடன் ரஜினி நிச்சயம் கூட்டணி வைக்கமாட்டார்’’ என்று கூறியிருந்தார்.

இதில் அ.ம.மு.க. சார்பில் வெற்றிவேல் பதிலளித்துவிட்ட நிலையில், இப்போது பா.ம.க. தலைவர் ராமதாஸும் பதில் சொல்லியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று (11.2.2020)  பா.ம.க. தலைவர் ராமதாஸ் “ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறியிருக்கும் தமிழருவி மணியனின் பேட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. ரஜினி முதலில் கட்சி துவங்கட்டும். துவங்கிய பின் கூட்டணி பற்றி யோசிக்கலாம்” என்று சுருக்கமாக பதில் தந்துள்ளார்.

தமிழருவி மணியன் பேச்சுக்கு அ.ம.மு.க. வெற்றிவேல் தந்துள்ள பதிலில் ரஜினி எங்களுக்கு முக்கியமில்லை என்கிற தொனி தெளிவாக ஒலிக்கிறது. ஆனால், பா.ம.க. தலைவர் ராமதாஸ் சொல்லிய பதிலில் அப்படி ஏதும் ஒலிக்கவில்லை. இந்தப் பதிலில் கோபம் காட்டப்படவில்லை. மேலும், இதுபோன்ற ஒரு சம்பவங்கள் நடந்தால் பழைய வழக்கபடி ராமதாஸ் நீண்ட தெளிவான விளக்கமும், பதிலும் அளிப்பார். ஆனால், இப்போது தந்துள்ள பதிலில் பழைய ராமதாஸ் இல்லை. மேலும், அவரது பதிலில் எந்த அர்த்தமும் புரிந்துக் கொள்ளமுடியாத அளவுக்கு பூடகமாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் ரஜினியின்  ‘முத்து’ படத்தில் வரும் பாடலின் வரிகளான ‘’என்னமோ திட்டமிருக்கு” என்றுதான் ராமதாஸை பேச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பேச்சும் தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதமாகி வருகிறது.

  • எஸ்.எஸ்.நந்தன்