மிதவாத இந்துத்வா கொள்கைக்கு தாவும் தி.மு.க.!

slider அரசியல்
stalin-prasanth-kishore-

 

டெல்லி யூனியனில் ஆம் ஆத்மி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கப் போகிறது. மெஜாரிட்டிக்கு தேவைப்படும் இடங்களைத் தாண்டி அதிகளவில் வெற்றி பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாகத் திகழும் தி.மு.க.வுக்கும் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதால், தி.மு.க. முகாம் உற்சாகத்தில் இருக்கிறது. மேலும், பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டலில் இனி தி.மு.க.வின் நடவடிக்கையில் மிதவாத இந்துத்வா ஆதரவு காணப்படலாம் என்பதாகவும் தகவல் வெளியாவதால் பெரும் பரபரப்பு கூடியிருக்கிறது.

டெல்லி தேர்தலைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி சார்பில் குறிப்பாக முதல்வர் கெஜ்ரிவால் உட்பட  இந்துத்துவா அரசியலை தாக்கி யாரும் பேசவில்லை. மாறாக கொஞ்சம் இந்துத்துவாவிற்கு சார்பாக பேசினார்கள். மறைமுகமாக தங்களுக்கும் இந்துத்துவா கொள்கை இருக்கிறது என்று காட்டிக்கொண்டனர். நாங்களும் இந்துக்களை மதிக்கிறோம். அதேசமயம் இஸ்லாமியர்களையும் மதிக்கிறோம். இதனால் பா.ஜ.க.வைவிட நாங்கள் கொஞ்சம் மேல் என்று ஆம் ஆத்மி பிரச்சாரம் செய்தது. ஆம் ஆத்மி கட்சியின் இந்த மிதவாத இந்துத்துவா அரசியல் போக்கு பா.ஜ.க.வை பெரிய அளவில் ஆட்டம் காண வைத்தது. இஸ்லாமியர்களுக்கும் ஆதரவு. இந்துக்களுக்கும் ஆதரவு. நாங்கள் நடுநிலை என்றது. மிக முக்கியமாக இந்து மதத்தை நாங்கள் மதிப்போம். அவர்களின் பாரம்பரியங்களை நாங்களும் மதிப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி சொல்லாமல் சொல்லியது.

தேர்தலுக்கு முன்பே தொடங்கிய  சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்திலும் ஆம் ஆத்மி இதே நிலைப்பாட்டைதான் கடைபிடித்தது. மொத்தமாக ஆம் ஆத்மி சி.ஏ.ஏ. போராட்டத்தை ஆதரிக்கவும் இல்லை.  அதை எதிர்க்கவும் இல்லை. ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்ட பக்கம்கூட ஆம் ஆத்மி தலைவர்கள் செல்லவில்லை. மாணவர்கள் போராட்டங்களுக்கு சென்றால் நமக்கு வேறு முத்திரை குத்தி விடுவார்கள் என்று  ஆம் ஆத்மி கவனமாக இருந்தது. இது பா.ஜ.க.வுக்கு விழவேண்டிய இந்துத்வா ஓட்டுக்களை விழாமல் பார்த்துக் கொண்டது. அதற்கான பலன் இந்த மூன்றாவது முறையும் ஆம் ஆத்மி ஆட்சி என்கிறது டெல்லி அரசியல் வட்டாரம்..

தமிழகத்திலும் இதே அரசியலை தி.மு.க. முன்னெடுக்க தொடங்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும். கடந்த சில வாரங்களாக  தி.மு.க.வின் போக்கில் இது தென்பட ஆரம்பித்திருக்கிறது. உதாரணமாக தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு என்று தி.மு.க. தமிழர்களை ஒன்றிணைத்தது. அதேபோல் பழனி காவடி குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டிவிட் செய்ததையும் குறிப்பிட வேண்டும்.

இதில் மிகவும் முக்கியமாக கனிமொழி உட்பட சில தி.மு.க. தலைவர்கள் பெரியார் இந்துக்களுக்கு எதிரி இல்லை. இந்துத்துவாவிற்குத்தான் எதிரி என்கிற ரீதியில் பேசத் துவங்கியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.  ஸ்டாலின் மனைவி தினம் தினம் கோவிலுக்கு செல்வதும் இப்படிப்பட்ட சென்டிமென்ட்தான் என்கிறார்கள். ஸ்டாலின் அனுமதியுடன்தான் இது நடக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கை கொண்ட இந்துக்களின் வாக்குகளை கவரும் டெக்னீக்தான் இது என்றும், கெஜ்ரிவால் இதே டெக்னீக்கைதான் டெல்லியில் பயன்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி மற்றும் தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள  இந்த மாற்றங்களுக்கு பிரசாந்த் கிஷோர் தான் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

டெல்லிக்கு வெற்றி வாய்ப்பையும் ஆட்சியையும் கொடுத்த மிதவாத இந்துத்வா போக்கு தமிழகத்தில் தி.மு.க.வுக்கு இதேபோல் வெற்றி வாய்ப்பையும் ஆட்சியையும் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், வட இந்தியா அரசியல் என்பது வேறு. தென்னிந்திய அரசியல் என்பது வேறு. அதிலும் தமிழக அரசியல் எப்போதும் ஒரு புதிர் போன்ற கணக்கை கொண்டிருக்கும். இதில் பிரசாந்த் கிஷோரை நம்பி இந்தமுறை தி.மு.க. களம் இறங்குகிறது. இதன் முடிவு என்னவாகும் என்பதை அறிய வேண்டும் என்றால் நாம் அதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

  • தொ.ரா.ஸ்ரீ.