நடிகர் சங்கத் தேர்தல் ரத்து – நீதிமன்றத்தில் விஷால் வழக்கு!

slider சினிமா

 

கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஷால், கார்த்தி தலைமையில் ஓர் அணியும், பாக்யராஜ் மற்றும் ஐசரி வேலன் தலைமையில் இன்னொரு அணியும் பலமாக மோதின. இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்று முன்கூட்டியே கணித்திட முடியாத நிலையில், “இந்தத் தேர்தல் முறையாக நடக்கவில்லை. எனவே, தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என சங்க உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கில் சமீபத்தில் நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் இப்போது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதன்மூலம் இந்த விவகாரம் மீண்டும் விவாதமாக தொடங்கியுள்ளது.

நடிகர் விஷால் தரப்பில் தாக்கலாகியுள்ள  மனுவில், “தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகள் அதை நிர்வகித்து வருகின்றனர். அதேபோல, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக் காலம் முடிந்தும் சங்கத்தை நிர்வகித்து வந்தோம். நடிகர் சங்க பிரச்சனையில், தமிழக அரசு நடுநிலையோடு செயல்படவில்லை. ஒரு சார்பாக நடந்து கொண்டது. தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் தேர்தலை ரத்து செய்துள்ளார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே, நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கேட்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு நாளை மறுதினம் (13.2.2020) நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வரவிருக்கிறது.

நடிகர் சங்கத்திற்குள் தி.மு.க. அணி என்றும், அ.தி.மு.க. அணி என்றும் இரு அணிகள் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாக்யராஜ் அணியிலுள்ள ஐசரி வேலன் கல்லூரி நிறுவனர் மட்டுமில்லை, பல படங்களையும் தயாரித்து வருகிறார். இவருக்கு அ.திமு.க.வின் மேலிடத்துடன் நல்ல நெருக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது தமிழக அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சங்க உறுப்பினர்கள் குறித்து விபரங்களை சரிபார்க்க தொடங்கியிருப்பதாகவும், போலி உறுப்பினர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்களை நீக்கிவிடுவார் என்றும், இதன்பிறகு தான் தேர்தல் நடத்துவார் என்றும் நடிகர் சங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்