அ.தி.மு.க.வுடன் நெருங்கும் அ.ம.மு.க.!

அரசியல்
ops-eps-ttv

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுபட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஓர் அணி செயல்பட்டு வருகிறது. இன்னொரு அணி ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்கிற பெயரில் டி.டி.வி. தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் மீதும், தமிழக அரசு மீதும் பகிரங்க குற்றச்சாட்டுகளை கூறுபவர் தினகரன். இதுவரை அ.தி.மு.க. அரசை ஆதரித்து பேசியதில்லை. இப்போது காவேரி டெல்டா மாவட்டங்களை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவித்துள்ளதை வரவேற்று பாராட்டியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பேச்சாக உருவெடுத்திருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தினகரன்,   “தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து தமிழக அரசு இதை அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இதை அறிவிப்போடு நிறுத்தாமல் உண்மையாக செயல்படுத்த வேண்டும். இதேபோன்று சேலம் – சென்னை  எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ திட்டத்தையும் அமல்படுத்தக்கூடாது. தமிழருவி மணியன் ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர். அவருடன் எனக்கு நேரடியாக எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், அவரை மதிக்கிறேன். அவரை விமர்சித்து புண்படுத்த விரும்பவில்லை. காவிரி ஆற்றில் மாசு கலப்பதாக புகார் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படக்கூடாது” என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க. அரசைப் பாராட்டி தினகரன் பேசியிருப்பதால்,    “அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. இந்த சொற்றொடருக்கு அதிக வலிமையுண்டு என்றே சொல்ல வேண்டும். தி.மு.க.வை கடுமையாக எதிர்த்தவர்கள் அதனுடன் தேர்தல் கூட்டணி வைக்கும்போது, அதுபோல தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்தவர்களோடு தேர்தல் கூட்டணி வைக்கும்போது ஒரே தாய்க் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வது என்பது அதிக சாத்தியங்களை கொண்டது” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • நிமலன்