தமிழருவி மணியன் விஷயத்தில் ரஜினிக்கு உஷார் அவசியம்!

slider அரசியல்

 

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கிற போகிறார் என்கிற செய்தி அடிக்கடி ஊடங்கங்களில் வருவதுண்டு. அது சமயம் விவாதமாகவும் ஆவதுண்டு. அதன்பிறகு ரஜினி தரப்பிலிருந்து இது குறித்து எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இருக்காது. உடனே ஊடகங்களும் கொஞ்சநாளைக்கு இதுபற்றி எதுவும் மூச்சுவிடாது. அப்புறம் மீண்டும் இது ஆரம்பமாகி முடியும். இது ரொம்ப காலமாக தமிழகத்தில் எந்தவித விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இப்போது இதில் ரஜினியின் ஆதரவாளராக முகம்காட்டும் தமிழருவி மணியன் புதுகுண்டை வெடிக்க வைத்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் தமிழருவி மணியன் அளித்த பேட்டி ஒன்றில், ‘’ ரஜினி ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார். ஆகஸ்ட் மாதம் பொதுக் கூட்டம் நடத்துவார். செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். பா.ம.க. கட்சியுடன் ரஜினி கட்சி கூட்டணி வைக்கும். பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து ரஜினிதான் அறிவிப்பார். ஆனால், அமமுகவுடன் கூட்டணி வைக்க ரஜினி விரும்பவில்லை’’ என்று கூறியிருந்தார்.

இந்தப் பேட்டியால் அ.ம.மு.க. அதிகம் கோபமாகியுள்ளது என்று உடனடியாக தகவல் வெளிவரத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் இது குறித்து தற்போது ஒரு பேட்டியளித்தார்.

அப்போது அந்தப் பேட்டியில் வெற்றிவேல், ‘’ரஜினியின் அரசியல் குறித்து பேச தமிழருவி மணியனுக்கு என்ன அங்கீகாரம் உள்ளது. இவர் என்ன ரஜினியின் செய்தி தொடர்பாளரா? தமிழருவி மணியன் நல்லவராக இருக்கலாம். அதற்காக எதுக்கெடுத்தாலும் கருத்து சொல்லக்கூடாது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் டி.டி.வி. தினகரனுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று இவர் எவ்வாறு கூறலாம்? ரஜினியோடு கூட்டணி வைக்க அவர் வீட்டு வாசலில் நாங்கள் ஒன்னும் காத்திருக்கவில்லை. கூட்டணி குறித்து ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும் அல்லது அ.ம.மு.க. தலைமை முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையில் இடைத்தரகர் தமிழருவிமணியன் பேசக்கூடாது’’ என்று  ஆவேசமாக பதில் கொடுத்துள்ளார்.

காந்தீய மக்கள் இயக்கத் தலைவராக இருக்கும் தமிழருவி மணியன் மூப்பனாரின் தீவிர விசுவாசியாக இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு த.மா.க.வில் அவருக்கு மரியாதை கிடைக்காததால் காந்தீய மக்கள் இயக்கம் துவங்கினார். தேர்தலில் போட்டியிடாத இயக்கமாகவும், ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கமாகவும்  செயல்படத் தொடங்கிய இந்த இயக்கத்துக்கு தமிழகத்தில் ஒருசாராரிடம் நல்ல மதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழருவி மணியன் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டது.

இப்படியான ஒரு மதிப்பில் இருந்த தமிழருவி மணியன் இடையில் வைகோவை பாராட்டவும் செய்தார். இப்போது ஒரு சில வருடங்களாக ரஜினியை ஆதரித்து எல்லா இடங்களிலும் பேசி வருகிறார். இவருக்கும் ரஜினிக்குமான உறவு எதுவும் வெளிப்படையாக நிகழவில்லை. ரஜினியிடம் அரசியல் குறித்து பேசினேன் என்கிற தகவலை இவர் தான் அடிக்கடி பேட்டிகளில் சொல்லி வருகிறார். ரஜினி ஓர் இடத்தில்கூட தன்னைப் பற்றி அதிகாரப்பூர்வமாக பேச தமிழருவி மணியனுக்கு உரிமையுண்டு என்று சொன்னதில்லை. மேலும், ரஜினி மன்றத்திலும் தமிழருவி மணியன் பொறுப்பாளர் இல்லை. காந்தீய மக்கள் தலைவர் தான் தமிழருவி மணியன். நாளைக்கு ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்தக் கட்சி தமிழருவி மணியன் சேர்த்துக் கொள்ளப்பட்டு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டால் இவர் அப்போது ரஜினி குறித்து பேசும் பேச்சுக்களுக்கு மதிப்பு உண்டு. அவை நடக்காத பட்சத்தில் இவர் குறித்து அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் வெற்றிவேல் எழுப்பிய கேள்வி நியாயமாகவே பொதுவெளியில் ஏற்கப்படும். இந்த விஷயத்தில் ரஜினி கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியது ரொம்பவும் முக்கியம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்