இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு – ராகுல் காந்தியின் கருத்து!

slider அரசியல்

 

 

உச்சநீதிமன்றம் மாநில அரசுப் பணிகளில் இட இதுக்கீடு கட்டாயம் இல்லை என்றும், இது குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ள அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு கூறியுள்ளது. இது இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசையும், ஆர்.எஸ்.எஸ்.ஸையும் கடுமையாக விமர்சித்திருப்பது தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மாநில அரசுப் பணிகளில் முன்பு எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்தோருக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் காலி பணி இடங்கள் நிரப்பப்பட்டன. இதனை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில அரசின் உத்தரவை ரத்து செய்து எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தரகாண்ட் மாநில அரசு முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கட்டாயம் இல்லை. பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என்று தற்போது தீர்ப்பளித்தது. இந்தத்தீர்ப்பு  தேசிய அளவில் பெரும் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘’பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தத்துவமே இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னேறுவதை பா.ஜ.க.வும் ஆர். எஸ்.எஸ்.ஸும் ஒருபோதும் விரும்பியதும் இல்லை. அடிப்படை கட்டமைப்புகளை தகர்க்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் தலித்துகளுக்கு ஒருபோதும் இடஒதுக்கீட்டை விட்டுத் தருவதை காங்கிரஸ் என்றும் அனுமதிக்காது. இட ஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி , ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கனவு ஒருபோதும் நிறைவேறாது’’ என்று கூறியுள்ளார்.

இதுபற்றி  காங்கிரஸின்  மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம், ’’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்கவில்லை என கூறுகிறது. அப்படியானால் இந்த பிரச்சனையை சரி செய்ய மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் இன்று (10.2.2020) நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவையில் மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் இது குறித்து பதிலளிக்கையில், ’’இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. மத்திய அரசிடம் எந்த பிரமாண பத்திரத்தையும் உச்சநீதிமன்றம் தாக்கல் செய்யவும் கூறவில்லை’’ என்று கூறியுள்ளார்.

  • எஸ்.எஸ்.நந்தன்