ஆம் ஆத்மியுடன் கூட்டணி போடும் காங்கிரஸ்!

slider அரசியல்
அதிர் ரன்ஜன் சவுத்ரி

 

 

டெல்லி யூனியனில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே இந்தமுறையும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறிவருகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே பெரியளவு வித்தியாசம் இருக்காது என்றும், காங்கிரஸ் உதவியுடன் தான் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று ஒரு சில ஊடகங்கள் கருத்து கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன. இதனால் டெல்லி அரசியலில் புதுவித பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தமாதிரியான சூழலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு கொடுக்கும் பேச்சுக்களை காங்கிரஸ் முன்னெடுத்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி.யான அதிர் ரன்ஜன் சவுத்ரி கூறுகையில், ’’இந்தத் தேர்தலில் நாங்கள் முழு பலத்துடன் போராடினோம். இதில் பா.ஜ.க. தனது தலைவர்கள் அனைவரையும் அழைத்து வந்து ஷாஹீன் பாக் குறித்தே கத்திக்கொண்டு இருந்தது. ஆனால் கெஜ்ரிவால், மொஹல்லா கிளினிக் உள்ளிட்ட அவர்களின் திட்டங்கள் குறித்து பேசினார். பா.ஜ.க. இனவாத திட்டங்களையும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வளர்ச்சி திட்டங்களையும் முன்வைத்தனர். கெஜ்ரிவால் வெற்றி பெற்றால் அது வளர்ச்சி திட்டங்களின் வெற்றியாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸின் எம்.பியின் இந்தப் பேச்சு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையின் கண்ணசைவு இல்லாமல் பேசியிருக்க முடியாது என்றும், இதன்மூலம் ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியமைக்க ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் முட்டுக் கொடுக்க காங்கிரஸ் இப்போதே தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது என்று டெல்லி அரசியல் வட்டாரத்தை மேற்கோள் காட்டி அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • நிமலன்