பாரதிராஜாவிடம் பேரம் பேசிய பா.ஜ.க.!

slider அரசியல்

 

director bharathiraja

 

தமிழ் சினிமாவில் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளை நெருங்கும் அளவுக்கு பிரபலமாக இருந்து வருபவர் பாரதிராஜா. இவரை இயக்குனர் இமயம் என்று அடைமொழி வைத்துதான் அழைக்கிறார்கள். சினிமா என்றில்லை. தமிழர்களுக்கான போராட்டங்களிலும் தவறாமல் பங்கெடுப்பவர். சமயங்களில் இவரது அரசியல் கருத்துகள் பெரும் பரபரப்பை உண்டாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தின் கடைக்கோடிக்கும் வயது வித்தியாசமின்றி பாரதிராஜாவை தெரியும். இவ்வளவு செல்வாக்கு கொண்ட பாரதிராஜாவை தற்போது பா.ஜ.க.வில் என்னை சேரச் சொல்லி பேரம் பேசினார்கள் என்று சொல்லியிருப்பது பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா போட்டி அளித்தார். அதில் பாரதிராஜா, “தமிழகத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆனால் கர்நாடகா, கேரளாவில் அந்த மண்ணின் மக்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் நிச்சயம் ஜெயித்துவிடலாம்.     ஆனால், தமிழர்கள் ஒன்று சேரும்போது யார் தலைவர் என நினைக்கிறார்கள்.. அதேபோல் எல்லோரும் முன்னால் நிற்க வேண்டும் என விரும்புகின்றனர். பாதரசம் போல் இருக்கும் தமிழர்களை ஒன்று சேர்ப்பதும் கஷ்டமான ஒன்று.

நான் இதுவரை அரசியல் கட்சி தொடங்கலாம் என நினைத்தது இல்லை. ஏனெனில், அரசியல் என்றாலே கை நீட்டத்தான் வேண்டும். இதுவரை நல்ல கலைஞனாக இருந்துவிட்டேன். போகும்போது நல்ல கலைஞன் போகிறான் என சொல்ல வேண்டும். கரப்டெட் போகிறான் என சொல்லக் கூடாது. அதிகாரங்கள் நம்மை அச்சுறுத்தும்போது நமக்கு இயல்பாகவே கோபம் வரும்.. அதனால்தா ஏன் அந்த அதிகாரத்தைக் கையில் எடுக்கக் கூடாது என சிந்திக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை கோழியாகத்தான் இருப்பேன். கோழி கூவத்தான் செய்யும். குச்சி அடித்து கொத்தி கொத்தி ஒவ்வொருவரையாக வீட்டுக்குள் நுழைந்து எழுப்பாது. அதேபோல் கூரை மேல் நின்று கூவ மட்டுமே நான் செய்வேன். அரசியலுக்கு நிச்சயம் வரவேமாட்டேன்.  எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா அனைவருமே என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். ஆனால், அதை ஏற்கவில்லை. ஏன் ஆறு மாதத்துக்கு முன்னர் கூட மத்தியில் இருந்து பெரிய அளவில் பேசினார்கள். அதைச் செய்கிறோம்.. இதைச் செய்து கொடுக்கிறோம் என்றார்கள். எனக்கு இருக்கிற கடன் பிரச்சனைக்கு ரொம்ப பிரமாதம்னுகூட யோசிச்சேன். ஆனால், ஏற்கவில்லை. முடியாது என்று சொன்னேன். எழுந்து போய்விட்டார்கள்’’ என்று பாரதிராஜா பேசியுள்ளார்.

தமிழகத்தில் தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்று தேசிய கட்சியான காங்கிரஸ் நினைப்பதுபோலத்தான் பா.ஜ.க.வும் எண்ணுகிறது. இதில் காங்கிரஸை முந்தி சாதித்துவிட வேகமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சினிமா பிரபலங்களை கட்சிக்குள் கொண்டுவரும் உத்தியையும் பயன்படுத்துகிறது.கடந்த ஆண்டுகளில் இசையமைப்பாளர் கங்கை அமரனை கட்சிக்குள் கொண்டுவந்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடவும் வைத்தது. நடிகை கவுதமி, காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் சமீபத்தில் இணைந்திருக்கும் இயக்குநர் பேரரசு, நடிகர் ராதாரவி என்று சினிமா துறை சார்ந்த பெரும்புள்ளிகளை கட்சியில் இணைத்துள்ளது. இதன்படியாகவே பாரதிராஜாவையும் பா.ஜ.க.வில் சேரச் சொல்லி அணுகியிருப்பார்கள். பாரதிராஜா தமிழ் அமைப்புகள் பின்பற்றும் தமிழ் தேசியம் மீது விருப்பம் வைத்திருப்பவர்.  இது பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு நேர் எதிரானது. இதனாலே மறுத்திருப்பார். பாரதிராஜா தந்துள்ள பேட்டியிலிருந்து ஒன்று வெட்ட வெளிச்சமாகிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குள் நிறைய சினிமா பிரபலங்களை பா.ஜ.க.வுக்குள் கொண்டுவர அதன் தலைமை முடிவு எடுத்து ரகசியமாக அதற்கான பின்னணி வேலைகளையும் துரிதகதியில் செய்து வருவதை பாராதிராஜா பேச்சு அம்பலப்படுத்தியுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்