சுப்ரமண்ய சுவாமிக்கு கடிவாளம் போட்ட பா.ஜ.க. தலைமை!

slider அரசியல்

 

தேசிய அளவில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்ரமண்ய சுவாமி. தற்போது மாநிலங்களைவை எம்.பி.யாகவும் இருக்கிறார். இவரது சொந்த மாநிலம் தமிழகம். அதனால் தமிழகம் வரும்போதெல்லாம் இவர் பேசும் பேச்சுக்கள் தேசிய அளவில் சர்ச்சையாவதும் அடிக்கடி நடக்கும். இதன்படியே இப்போது சுப்ரமண்ய சுவாமி பேசியிருப்பதும் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நேற்று (7.2.2020) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சுப்ரமண்ய சுவாமி.  அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ‘பட்ஜெட்டைப் படித்து விட்டீர்களா? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன’ என்று கேட்டனர். இதற்கு பதிலளிக்கும்போது சுப்ரமண்ய சுவாமி, ’’ நான் இப்போது சோனியா காந்தி மற்றும் சிதம்பரம் உள்ளிட்டவர்களை சிறைக்கு அனுப்பும் வேலையில் இருக்கிறேன். அதனால் பட்ஜெட்டை படிக்கவில்லை. படித்ததும் அதைப் பற்றிக் கூறுகிறேன்’ என அதிரடியாக பதிலளித்துள்ளார்.

இதே சுப்ரமண்ய  சுவாமி கடந்தமுறை மோடி தலைமையிலான அரசு மீதும் பல விமர்சனங்களை வைத்துள்ளார். குறிப்பாக, சென்றமுறை பா.ஜ.க. அரசில் நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கடுமையாக விமர்சித்து வந்தார். இவர் அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றியவரும்கூட. இதனால் பொருளாதாரத் துறை சம்பந்தப்பட்டவை மீது இவர் விமர்சனம் எதிர்க் கட்சி என்றோ சொந்தக் கட்சியோ என்றோ வித்தியாசம் பார்க்காது. தனது வழக்கமான பாணியில் சாடிவிடுவார். இதன்படியே தற்போது நிதியமைச்சராக இருந்துவரும் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி கொஞ்சமும் அறிவு கிடையாது என்று அடிக்கடி விமர்சனமும் செய்து வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று (7.2.2020) செய்தியாளர்கள் இதனை முன்னிட்டுதான் பட்ஜெட் கேள்வியை கேட்டுள்ளனர். ஆனால், சுப்ரமண்ய சுவாமி இது குறித்து சரியாக பதிலளிக்காமல், சோனியாவையும், சிதம்பரத்தையும் சிறைக்கும் அனுப்பும் வேலையில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த பதில் குறித்து யோசிக்கையில் தமிழகம் என்பதால் சிதம்பரம் குறித்து பேசவேண்டும் என்பதற்காக இப்படி பதில் சொல்லியிருப்பாரோ என்று ஒரு பக்கம் எண்ணினாலும், சமீபமாக சுப்ரமண்ய சுவாமி பேச்சுக்கள் சேம் சைடு கோல் போடுவதுபோல் அரசியலில் எதிரொலிப்பதால் பா.ஜ.க. தேசிய தலைமை கடிவாளம் போட்டதால்தான் வழக்கமாக நிர்மலா சீதாராமனை கிண்டலடிக்கும் சுப்ரமண்ய சுவாமி அதற்கான தோதான வாய்ப்பாக சூழல் அமைந்தபோதும் அதை தவிர்த்து வேறொரு அரசியல் பேசி சென்றுள்ளார் என்கிற பக்கத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது என்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பேச்சு உலா வரத் தொடங்கியிருக்கிறது.

  • தொ.ரா.ஸ்ரீ.