ஆஸ்திரேலிய வீரரை புகழ்ந்து பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்!

slider விளையாட்டு

 

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில்  ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தினால்  பெருத்த பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இதில் பலரும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நலநிதி திரட்ட பத்து ஓவர் கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இந்த போட்டி மெல்போர்னில் நாளை (9.2.2020) நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும், ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் மோதுகின்றன. ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக  அமர்த்தப்பட்டுள்ளார்.

இதனை முன்னிட்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளார் சச்சின் தெண்டுல்கர். அங்கே சச்சினுக்கு செய்தியாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த செய்தியாளர் சந்திப்பில் சச்சினிடம், “நீங்கள் விளையாடியபோது உச்ச நிலையில் இருந்த காலகட்டத்தில் ஆடியதைபோல் தற்போது விளையாடும் வீரர் யார் என்று நினைக்கிறீர்கள்?’’ என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு சச்சின் தெண்டுல்கர், “கடந்த ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆஷஸ் போட்டி தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை நான் டெலிவிஷனில் பார்த்தேன். பவுன்சர் பந்து தாக்கியதில் ஸ்டீவன் ஸ்மித் காயம் அடைந்து வெளியேறியதால் அவருக்குப் பதில் மாற்று வீரராக களம் கண்ட மார்னஸ் லபுஸ்சேன் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடியதை பார்த்தேன். எனது மாமனாருடன் அமர்ந்து அந்த போட்டியை கண்டுகளித்தேன். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய இரண்டாவது பந்து லபுஸ்சேனை தாக்கியது. ஆனால், அதன்பிறகு அடுத்த 15 நிமிடங்கள் அவர் ஆடிய விதத்தை பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. அப்போதே, அந்த வீரரிடம் வித்தியாசமான திறமை இருக்கிறது, சிறந்த வீரராக உருவெடுப்பார்’ என்று கூறினேன். அவரது கால் நகர்த்தல் துல்லியமாக உள்ளது. கால் நகர்வு என்பது வெறும் உடல் ரீதியானது மட்டுமல்ல. அது மனரீதியானது. நீங்கள் மனதளவில் நேர்மறையான எண்ணத்துடன் இல்லையென்றால் கால் நகர்த்தல் சரியாக வராது. மனதளவில் வலுவாக இல்லை என்றால் கால் நினைத்தபடி நகராது. அவரது கால் நகர்த்தல் நம்ப முடியாத வகையில் உள்ளது. அவரது பேட்டிங் எனது ஆட்டத்தை நினைவூட்டுகிறது.

‘விராட்கோலி, ஸ்டீவன் ஸ்மித்தை ஒப்பிடுகையில் யாருடைய ஆட்டம் சிறந்தது என்று கேட்கிறீர்கள்?. ஒப்பிட்டு பார்ப்பதை நான் விரும்பமாட்டேன். என்னை பல வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்க முயற்சித்தார்கள். என்னை ஒப்பிடுவதை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்து விட்டேன். நாம் ஒப்பீடுகளுக்குள் செல்ல வேண்டாம். அவர்கள் இருவரின் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் பார்ப்போம். அவர்கள் இருவரும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள். அவர்கள் ஆடுவதை பார்ப்பது நமக்கு மகிழ்ச்சியே’’ என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

இருபத்தைந்து வயது நிரம்பிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரரான  லபுஸ்சேன் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் (1,104 ரன்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

 

எஸ்.எஸ்.நந்தன்