நான் போட்டி அரசாங்கம் நடத்தவில்லை – கிரண்பேடி வாக்குமூலம்!

slider அரசியல்
kiran-bedi

கடந்த பா.ஜ.க. அரசில் புதுவை கவர்னராக நியமிக்கப்பட்டவர் கிரண்பேடி. இவர் பா.ஜ.க.வை சேர்ந்தவர். ஆனால், புதுவையிலேயே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி முதல்வராக இருக்கிறார். முதல்வராக நாராயணசாமி பதவியேற்றதிலிருந்தே கவர்னர் கிரண்பேடியுடன் அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. யாருக்கு அதிகாரம் அதிகம் என்று நீதிமன்ற வழக்கு வரை சென்றது. இந்ந்நிலையில் கிரண்பேடி சமீபத்தில் இது குறித்து பேசியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி பதவியேற்றார். அவர் கவர்னராக பதவியேற்றவுடனே புதுவையில் பல இடங்களுக்கும் ஆய்வுக்கு சென்றார். மக்களிடம் மனு வாங்கினார். மேலும், அரசு அதிகாரிகள் மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். எங்கும் ஊழல் நடந்திடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இதற்கு கட்சிகளுக்கு அப்பாலும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்களும் குவிந்தது. இது ஒரு பக்கம் என்றால், அரசியல்ரீதியாக மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் செய்ய வேண்டிய பதவி பிரமாணத்தை இவரே செய்தார் என்பன உள்ளிட்ட அரசியல் சார்புடைய விஷயங்களுக்காக விமர்சனங்களும் ஏற்பட்டது.

மேலும், முதல்வர் நாராயணசாமிக்கும், இவருக்கும் கவர்னருக்கு அதிகாரம் அதிகமா? முதல்வருக்கு அதிகாரம் அதிகமா? என்கிற வாதங்களும், மோதல்களும் பல விழாக்களிலும், அரசு சார்ந்த நடவடிக்கைகளிலும் ஏற்படுவது தொடர்ந்தது. இதற்காக நீதிமன்றத்தை நாடிய நாராயணசாமி தனக்கு சார்பான உத்தரவையும் நீதிமன்றங்களில் பெற்ற சம்பவங்களும் நடந்திருக்கிறது.

இந்நிலையில் புதுச்சேரியிலுள்ள கவர்னர் மாளிகையான ராஜ்நிவாஸில் நேற்று (5.2.2020) ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிரண்பேடி கலந்து கொண்டார். அதில் கிரண்பேடி பேசும்போது, “நான் புதுச்சேரியின் கவர்னராக பதவி ஏற்றது முதல், கவர்னர் மாளிகை, மக்கள் மாளிகையாக திகழ்ந்து வருகிறது. புதுச்சேரியில், தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக நான் போட்டி அரசாங்கம் நடத்தவில்லை. அரசாங்கத்தில் நானும் ஒரு பகுதி.மத்திய உள்துறையின் உத்தரவுகளை அறிவுறுத்தல்களை சட்ட விதிகளுக்குட்பட்டு அமல்படுத்தி வருகிறேன். முழு மாநில அந்தஸ்து பெற்ற கவர்னருக்கு உள்ள அதிகாரம் எனக்கு இல்லை.நானும் அரசு ஊழியர் போல் தான். சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட முடியும். நிதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எனக்கு முழுமையான பொறுப்பு இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.

இனியாவது புதுச்சேரியில் கவர்னர் – முதல்வர் மோதல் இல்லாமல் இருந்திட வேண்டும். இருவரும் இணக்கமாக செயல்பட்டு மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டுவந்து புதுச்சேரியை முன்மாதிரி யூனியன் பிரதேசமாக மாற்றிட வேண்டும் என்பதே புதுச்சேரியில் வாழும் சராசரி குடிமகனின் வேண்டுகோளாக இருக்கமுடியும்.

  • தொ.ரா.ஸ்ரீ.