இந்துத்துவா கொள்கையைவிட்டு விலகும் சிவசேனா!

slider அரசியல்

 

uddav-thakeray

 

இந்தியாவில் இந்துத்துவா கொள்கையைப் பின்பற்ற பல அமைப்புகள் இருக்கின்றன. இதில் அரசியல் கட்சியாகவும், மக்கள் செல்வாக்குள்ளவையாகவும் இருப்பவை பா.ஜ.க.வும், சிவசேனாவும். இந்த இரண்டு கட்சியும் இந்துத்வா கொள்கை அடிப்படையில் தான் கடந்த முப்பது ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வந்தன. அதில் கடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சராக யார் வருவது என்கிற போட்டியில் மோதல் ஏற்பட்டு இவர்களின் கூட்டணி உடைந்து போனது. அதன் பிறகு சிவசேனா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. அக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகவும் உள்ளார். இதன் தொடர்ச்சியில் சிவசேனா இந்துத்துவா கொள்கையை விட்டுவிட்டது என்று பா.ஜ.க. தரப்பிலிருந்து குற்றச்சாட்டு வைக்கப்படுவது தொடர்கிறது. இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநில பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஒரு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர்,  ’’நான் ஒரு சிவசேனா ரசிகன். மராத்திய கலாசாரம் உயிரோட்டமாக இருப்பதற்கும், இங்கு இந்துக்கள்  நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருப்பதற்கும் சிவசேனா காரணமாக இருப்பதாக உணருகிறேன். ஏனெனில் பல கலவரங்களில் மக்களை பாதுகாப்பதில் சிவசேனாவினர் உறுதியாக இருந்து இருக்கிறார்கள். ஆனால், தற்போது சிவசேனாவை இந்துத்துவா கொள்கையில் இருந்து பிரிக்க காங்கிரஸ் கட்சி சதி செய்கிறது. அந்த இடத்தில் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி அனுமதிக்கப்படுகிறது. இந்த சதித் திட்டத்தை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்துத்துவா கொள்கையில் நவநிர்மாண் சேனா வருவதை பாரதீய ஜனதா வரவேற்கிறது. சிவசேனா இந்துத்வாவை கைவிடவில்லை என்று கூறி உத்தவ் தாக்கரே மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார். உண்மையில் இந்துத்துவாவை கைவிடவில்லை என்றால், சிவசேனா ஏன் வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை விடுக்கவில்லை? காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயுடன் வீரசாவர்க்கருக்கு உடல் ரீதியாக தவறான உறவு இருந்ததாக காங்கிரஸின் சேவா தளம் அமைப்பு வெளியிட்ட சர்ச்சை புத்தகம் தொடர்பாக அமைதி காப்பது ஏன்? ’’ என்று கூறியுள்ளார்.

இது ஒருபுறம் என்றால் மதசார்பற்ற கொள்கை கொண்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்து முதல்வராகியுள்ள சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஒரு பேட்டியில், ’’ பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது சிவசேனாவின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். குடியுரிமை திருத்தச்சட்டத்தால், இந்திய குடிமக்களை நாட்டில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதை நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்துக்களையும், முஸ்லிம்களையும் பாதிக்கும். இதன் மூலம் இந்துக்கள் உள்பட அனைத்து மத குடிமக்களும் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்.

அசாமில், 19 லட்சம் பேரால் தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை. இவர்களில் 14 லட்சம் பேர் இந்துக்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் அதனை ஆதரிப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இது தொடர்பாக சட்டம் இயற்றுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் முதலமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாருக்கும் அநீதி ஏற்படுவதை அனுமதிக்க மாட்டேன். அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட மதசிறுபான்மையினர் எத்தனை பேர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்பதை பற்றி அறிந்து கொள்ள நாட்டுமக்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில் குடியமர்த்தப்படுவார்கள் என்பது அறியப்பட வேண்டும். அவர்களின் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு பற்றிய நிலைப்பாடு என்ன? இந்த பிரச்சினைகள் அனைத்தும் முக்கியமானவை. மராட்டியத்தில் அவர்கள் எங்கு வசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதை முதல்-மந்திரி என்ற முறையில் நான் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இங்கு குடியுரிமை பெறும் போது பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வீடுகள் கிடைக்குமா? இங்கு எங்களது சொந்த மக்களுக்கே போதிய வீடுகள் இல்லை. குடியுரிமை பெறுபவர்கள் டெல்லி, பெங்களூரு, காஷ்மீரில் குடியமர்த்தப்படுவார்களா? பல காஷ்மீர் பண்டிதர்கள் சொந்த நாட்டிலேயே இன்னும் அகதிகளாக இருக்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. ஆகவே, தங்களது கட்சியின் உயிர்நாடியான இந்துத்வா கொள்கையை அரசு சார்ந்தும் நடைமுறைப்படுத்துவதில் அதற்கு எந்த நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கோ நிலைமை தலைகீழ். அங்கு மதசார்பற்ற கொள்கை கொண்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் இந்துத்துவா கொள்கை விஷயத்தில் அடக்கி வாசிக்க வேண்டிய நெருக்கடி அந்தக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் சிவசேனா பா.ஜ.க. போல் இந்த விஷயத்தில் நடந்துகொள்ள முடிவதில்லை. அதேநேரத்தில் இந்துத்துவா கொள்கையில் மறைந்த பால் தாக்கரே மாதிரியான தீவிர நிலைப்பாடு எதுவும் அவரது மகனும், தற்போதைய கட்சித் தலைவரான உத்தவ் தாக்கரேவிடம் இல்லை என்பதும் பல சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியிருக்கிறது. இதன் தொடர்ச்சியில் பின்வரும் காலங்களில் இந்துத்துவாவை பேசும் அரசியல் கட்சியாக ஒற்றையாக நிற்கும் ஒன்றாக பா.ஜ.க. மட்டுமே இருந்திடவும் அதிக வாய்ப்பிருக்கிறடு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்