ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்- பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா

slider விளையாட்டு

 

 

 

தென்னாப்பிரிக்காவில் 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (4.1.2020) போர்ட்செஸ்ட்ரூமில் நடந்த முதலாவது அரை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இத்தொடர் முழுவதும் இந்த இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரொஹைல் நசீர் 62 ரன்னும், ஹைதர் அலி 56 ரன்னும் மற்றும் முகமது ஹாரீஸ் 21 ரன்கள் எடுத்தனர். இதன்பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.  இந்திய அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 105 ரன்னும், சக்சேனா 59 ரன்னும் எடுத்தனர்.   இதனால் இந்திய அணி 35.2 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 176 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.   மேலும், இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக நுழைந்துள்ளது. இனி வங்காளதேசம் – நியூசிலாந்துக்கு இடையே நடக்கவுள்ள இரண்டாவது போட்டியில் வெல்லும் ஒரு அணியுடன் இந்தியா இறுதி போட்டியில் விளையாடும். அனேகமாக, இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி விளையாடிவரும் ஆட்டத் திறணை வைத்து மதிப்பிடுகையில் இளையோர் உலகப் கோப்பை இந்தமுறை நமக்கும் தான் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடைசியாக நடைபெற்ற இளையோர் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

  • எஸ்.எஸ்.நந்தன்