தமிழக சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி

slider அரசியல்

     

   தமிழகத்தில் நீண்ட நாள்களாக எதிர்பாப்புக்குள்ளாகியுள்ள ஒரு விஷயம் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி ரத்து வழக்கு.  தி.மு.க. சார்பில் போடப்பட்ட இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. எனவே, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது தி.மு.க. தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணயில் இருக்கும் இந்த வழக்கில் தீர்ப்பு தி.மு.க.வுக்கு சார்பாக வருமானால் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் நிலை ஏற்படலாம்.

   கடந்த   2017- ம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது அரசை எதிர்த்து வாக்களித்தவர்கள்தான் ஓ.பி.எஸ். உள்ளிட்ட இந்த 11 எம்.எல்.ஏ.க்கள். இவர்கள்  அ.தி.மு.க. கொறடாவின் உத்தரவை மீறி இப்படி வாக்களித்திருந்தனர். இதன்படி சபாநாயகர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தமிழக சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை எதிர்த்தே  தி.மு.க. சார்பில் நீதிமன்றங்களை நாடினர். அந்த வழக்கு தான் இப்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையாகியுள்ளது.

  இன்று (4.1.2020) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க, முதல் நாளே சூடும் பிடித்தது. தங்கள் உத்தரவில் நீதிபதிகள், “சபாநாயகர் எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார்?” என்றும்,  “இது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க வேண்டும்” எனவும், “தகுதி நீக்கம் கோரும் மனுவை பேரவைத் தலைவர் கிடப்பில் வைத்திருக்க முடியாது” என்றும்,  “மூன்று வருடங்களாக இந்த விஷயத்தில் சபாநாயகர் எதுவும் செய்யாமல் இருந்தது அநாவசியம்” என்றும், “சபாநாயகருக்கு இந்த வழக்கில் உள்ள சிக்கல் என்ன?” என்றும், “பிப்ரவரி 14-ம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணை மறுபடியும் நடக்கும்” என்றும், “இது குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞா் விஜய் நாராயணன் இன்னும் இரண்டு  வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.

 உச்சநீதிமன்றம் இப்படி கறாராக கூறியிருப்பதால், இந்த வழக்கு குறித்து தன் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்திடம் சபாநாயகர் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் தி.மு.க.வின் நோக்கமாக இருப்பது என்ன்வென்றால், கொறாடா புகாரின் மீது சபாநாயகர் என்னதான் முடிவு எடுத்துள்ளார் என்பதாக கூறப்படுகிறது.  உச்சநீதிமன்றமும் அதை நோக்கியே விசாரணையை நகர்த்துவதாக அறிய முடிகிறது. ஆகவே, இது குறித்து இன்னும் சிலநாளில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்  என்பது அதி முக்கியமான ஒன்று. அது எதுவாகயிருந்தாலும் பெரும் விவாதத்தை உண்டாக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 – எம்.டி.ஆர்.ஸ்ரீதர்