ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அதிரடியாக முடிவெடுத்த அ.தி.மு.க. அரசு!

slider அரசியல்

 

 

தமிழகத்தில் 5-ம் மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு பொதுத் தேர்வு கட்டாயம் என்கிற அரசாணையை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து இதனை எதிர்க்கத் தொடங்கின தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள். கல்வியாளர்களும் இந்த நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதில் இன்று (4.2.2020) தமிழக அரசு முக்கிய முடிவு எடுத்து அறிவித்துள்ளது.

 

இந்தியா முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை அமலில் இருக்கிறது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு கடந்த சில ஆண்டுகளாக கூறிவந்தது. இதனை நடைமுறைப்படுத்தும் சட்டவழிகளில் இறங்கி வெற்றியும் கண்டது. இதன்மூலம் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் செய்யப்பட்டு மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும். இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் பலரும் கருத்து வெளியிட்டார்கள்.

 

பள்ளிகளில் 5-ம் மற்றும் 10-ம் வகுப்புக்கு  பொதுத் தேர்வு கட்டாயம் என்கிற முறையினை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்தனர். அவர்களின் கருத்தை கொஞ்சம் பார்ப்போம்.

 

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், “பிஞ்சு உள்ளங்களில் நடத்தப்படும் கொடூரமான தாக்குதல். பொதுத்தேர்வு என்பது மாணவர்களை வடிகட்டுவதற்கான ஒரு முயற்சி”

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,  “மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்லாமல் தடுத்து, ஏழை எளிய மாணவர்களை, பள்ளியை விட்டு வெளியேற்றுவதற்கான ஒரு முயற்சி. இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. இதற்கு தமிழக அரசும் துணைபோவது மற்றும் அவர்களுடன் கைகோர்ப்பது வேதனையளிக்கிறது.”

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி, “சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்; இம்முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.”

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘’இது நம் குழந்தைகளின் வாழ்வாதாரம். படிக்க விருப்பம் இல்லாத மாணவர்களை ஈர்த்து படிக்க வைக்க காமராஜர், எம்.ஜி.ஆர். திட்டம் வகுத்தனர். அந்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் புதிய திட்டங்கள் வரக்கூடாது.”

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’5வது, மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை. இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக் கல்வித்திட்டம்.”

 

இன்னும் பா.ம.க. தலைவர் ராமதாஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும்  இதே கருத்தை வலியுறுத்தியிருந்தனர். இந்த கருத்தை வலியுறுத்தாத ஒரு கட்சியென்றால் அது தமிழக பா.ஜ.க. மட்டும்தான்.

 

தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த விஷயத்தில் இவ்வளவு தீவிரம் காட்டியதை அறிந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இதில் ஒரு முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி இன்று (4.2.2020) இந்தத் திட்டத்தை நீக்கி  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கையில், ‘’5-ம் மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அவற்றை ஜெயலலிதாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

 

பள்ளிக் கல்வியை பொறுத்தவரை அது மாநிலப் பட்டியலில் வருகிறது. ஆகவே, இது குறித்து எந்தவொரு முடிவு எடுக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தின்படி தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு அரசியல் சங்கதி என்னவென்றால் பா.ஜ.க.வுக்கு விருப்பமில்லாத ஒரு முடிவை அ.தி.மு.க. அரசு எடுத்திருக்கிறது. இது அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவில் என்னவாகும் என்பது இன்னும் சிலநாளில் தெரியவரும்.

 

– எஸ்.எஸ்.நந்தன்