அதிகரிக்கிறது உதயநிதி தலைமையில் நடைபெறும் தி.மு.க. கூட்டங்கள்!

slider அரசியல்

 

Stain-udhayanithi

 

தி.மு.க.வில் கலைஞருக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின் தலைவராகியுள்ளார். ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதியும் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். உதயநிதிக்கு கட்சி பதவி கிடைத்ததிலிருந்தே கட்சியின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுபோல கட்சியின் போராட்டங்களிலும் பங்கெடுக்கிறார். தந்தையுடன் கலந்து கொள்வது ஒரு பக்கம் என்றால், உதயநிதியை மட்டும் முன்னிறுத்தி தி.மு.க. சார்பில் கூட்டங்கள் நடத்தப்படுவதும் சமீபமாக அதிகரித்துள்ளது.  இன்று (4.2.2020) டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகளில் நடைபெற்ற ஊழலை கண்டித்து தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்திலும் உதயநிதி தனியாக முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

 

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 2 மற்றும் குரூப் – 4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தினமும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணமிருக்கிறது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இரண்டு வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த ஊழலில் யார் யார் உண்மையான குற்றவாளிகள் என்பதைக் கண்டுபிடித்திட வேண்டும். இதனை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு செய்திடாது. ஆகவே, இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என தி.மு.க.  கோரிக்கை வைத்து வருகிறது.

 

தி.மு.க.வின் இந்தக் கோரிக்கையை வலியுறுத்திதான் இன்று (4.2.2020) சென்னையிலுள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் முன் தி.மு.க. மாநில இஞைரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி இன்டர்வல் தான் என்றும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்தான் கிளைமேக்ஸ் உள்ளது’’ என்று  பேசியுள்ளார்.

 

டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வில் நடைபெற்ற ஊழலை எதிர்த்து எதிர்கட்சியான தி.மு.க. போராட்டம் நடத்துவது என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இன்னும் சொன்னால் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியின் கடமையும்கூட. அதை செயல்படுத்திய தி.மு.க.வுக்கு பாராட்டுக்கள் எல்லா தரப்பிலிருப்பதும் கிடைப்பது நிச்சயம். ஆனால், இதில் தி.மு.க.வின் வாரிசு அரசியலை உருவாக்கும் போக்கு ஒன்றும் ரகசியமாக அரங்கேறியுள்ளது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இதன் உள்நோக்கம் ஜனநாயக வழியில் கட்சித் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கும் நடைமுறையுள்ள தி.மு.க.வில் தலைமையில் மட்டும் இப்படி வாரிசு முறை இரண்டாவது தலைமுறையாகவும் நடைபெறத் துவங்கியிருப்பது தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டனிடம் ஒருவித சலிப்பைத் தந்துவிடலாம் என்பதான கருத்தும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

– நிமலன்