ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள அனுமதிக்க முடியாது – பாராதிராஜா ஆவேசம்!

slider அரசியல்

 

 

தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரபல இயக்குநராக இருந்து வருபவர் பாரதிராஜா. இப்போதுகூட அவர் நடித்து இயக்கியுள்ள  ‘மீண்டும் ஒரு மரியாதை’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. சினிமாவில் மட்டுமல்ல அரசியல் ரீதியான இவரது கருத்துகளும் அவ்வப்போது பெரும் பரபரப்பை உண்டாக்கும். சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு சினிமா சார்ந்த விழாவில் ரஜினிகாந்துடன் கலந்து கொண்ட பாரதிராஜா, ரஜினிகாந்தை மிகவும் புகழ்ந்து பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது, “ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று பாரதிராஜா பேசியிருப்பது பெரும் பரபரப்பை தமிழகத்தில் உண்டாக்கியுள்ளது.

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா அண்மையில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் பாரதிராஜா, “உங்கள் பூமியை ஆள்வதுபோல, எங்கள் பூமியை தமிழர் ஆள வேண்டும். மராட்டிய மாநிலத்தை மராட்டியர் ஆள்கிறார். கர்நாடகாவில் கன்னடர்தான் முதல்வர். அசாமில், அசாம் மாநிலத்தவர்தான் முதல்வர். ஏன் எங்களுக்கு எங்கள் மண்ணின் மைந்தர் முதல்வராக கூடாது? பழைய மோசமான முன் உதாரணத்தை வைத்து அவர் முதல்வரானார். இவர் ஏன் ஆகக்கூடாது என கேட்க கூடாது. முன்பு தமிழர்கள் ஏதோ தெரியாமல் தூக்கி சுமந்தார்கள். முன்பு வெள்ளையன் ஆட்சி நடந்தது. இங்கே ஒரு வெள்ளையர் இப்போது முதல்வராக இருந்தால் நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா?’’ என்று கூறியுள்ளார்.

இதே நிகழ்ச்சியில் பாரதிராஜாவின் இந்த பதிலைத் தொடர்ந்து அவரிடம், “ரஜினிகாந்த் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்கிறீர்களே?” என்று கேட்டனர். அந்தக் கேள்விக்கு பாரதிராஜா பதிலளிக்கையில், “அவர் ஒரு நல்ல மனிதர். எளிமையின் உச்சம். ரொம்ப அற்புதமானவர். நண்பர். அந்த அடிப்படையில், விழாக்களில் பங்கேற்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

பாரதிராஜாவின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களிடமும், அவரது ஆதரவாளர்களிடத்திலும் பெருத்த கோபத்தை பாரதிராஜா மீது ஏற்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சினிமா இயக்குநர் பிரவீன் காந்தி ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் பிரவீன் காந்தி,  ’’பாரதிராஜா ஒரு மூத்த இயக்குநர். அவரது வார்த்தை கவனிக்கப்படும். அதை பாரதிராஜா புரிந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்த் வெறும் நடிகர் இல்லை. மக்களை நல் சிந்தனையோடு வாழ வைக்க விரும்பும் ஒரே தலைவர் ரஜினிகாந்த்தான். மற்றவர்கள் மக்களை வாக்கு வங்கியாகத்தான் பார்க்கிறார்கள். பாரதிராஜா ஒப்புக்கொள்ளாவிட்டாலும், மக்கள் ஏற்றுக் கொண்டனர். 2021-ம் ஆண்டில் ரஜினிகாந்த்தான் முதல்வர் என்பது எழுதப்பட்ட விதி. அதை பாரதிராஜா பேட்டி மாற்றிவிட முடியாது’’ என்று கூறியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா ரொம்ப காலமாகவே தமிழ் அமைப்புகள் பின்பற்றும் கொள்கைகளை வலியுறுத்தி வருபவர். இதன்படி ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தான் பாரதிராஜாவுக்கு ஒத்துப் போகாது. சினிமா என்பதை கலையின் வடிவமாக பார்க்கும் பழக்கமுடையவர் பாரதிராஜா, அதன்படி ரஜினியை சினிமாவில் ஏற்றுக்கொண்டு புகழ்கிறார். இவ்விரண்டையும் தனித்தனியாகத்தான் புரிந்துக் கொள்ளவேண்டும். அரசியலில் ரஜினி நுழைவதை யாராலும் எப்படி தடுக்க முடியாதோ? அப்படித்தான் அரசியல் என்கிற வகையில் ரஜினிகாந்த் குறித்து பாரதிராஜா பேசுவதையும் யாராலும் தடுக்க முடியாது என்கிற பேச்சும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரியளவில் விவாதமாகி வருகிறது.

  • நிமலன்