கொங்கு மண்டலத்தில் தி.மு.க. வலுப்படுத்த களமிறங்கும் ஸ்டாலின்!

slider அரசியல்

 

 

 

2016-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் ஆட்சி வாய்ப்பை பறிபோக முக்கிய காரணமாக இருந்தது கொங்கு மண்டலம். இந்த மண்டலத்தில்தான் தி.மு.க. அதிகளவில் தோல்விகளைச் சந்தித்தது. அ.தி.மு.க. அதிகளவில் வெற்றிகளைப் பெற்றது. இந்த வெற்றிகள் அ.தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலிலும், தி.மு.க.வை பிரதான எதிர்க் கட்சி வரிசையிலும் அமர்த்தியது. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் கட்சிக்குள் நடைபெற்ற உள்ளடிதான் தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்று தி.மு.க. தலைமை விசாரணை நடத்தி கண்டுபிடித்தது. இதன் மீதான நடவடிக்கையை பல மாதங்களாக தள்ளிப் போட்டுவந்த தி.மு.க. தலைமை இப்போது அதிரடியாக களம் இறங்கியுள்ளது.

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழுவில் பேசிய நிர்வாகிகள் பலரும் கொங்கு மண்டல தி.மு.க  மூத்த நிர்வாகிகள் பலரும் அ.திமுகவுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதையும்  குமுறலாக வெளிப்படுத்தினர்.  இதன்பின்னர் இது குறித்து இந்தக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் ஸ்டாலின், “யார் துரோகம் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடும் தொனியில் பேசியிருந்தார்.

அப்படிப் பேசி ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே கட்சித் தலைவர் ஸ்டாலின், தான் சொன்னபடி களையெடுப்பு நடவடிக்கைகளை இப்போது தொடங்கிவிட்டார். தற்போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த  சேலம் மாவட்ட தி.மு.க.வில் எதிரும் புதிருமாக அரசியல் செய்துவந்த வீரபாண்டி ராஜா, சிவலிங்கம், செல்வகணபதி ஆகிய மூவருக்கும் புதிய பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். வீர்பாண்டி ராஜா, தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலராளர் ஆக்கப்பட்டுள்ளார்.  அவரிடமிருந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி என்.ஆர். சிவலிங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சேலம்  மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி செல்வகணபதிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட காந்திசெல்வன்  நீக்க்கப்பட்டுள்ளார். இவர் தி.மு.க.வினரின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். இவரிடமிருந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்குப் பதிலாக ராஜேஷ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த நீக்கத்துக்கு காரணமாக காந்திசெல்வன் மீதான புகார்கள் குறித்து தி.மு.க. தலைமை விசாரணகளை தீவிரமாக நடத்தி அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இப்போதைக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் களையெடுப்பு நடைபெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொங்கு மண்டலத்தின் மற்ற பகுதிகளிலும் களையெடுப்பு நடக்கவிருப்பதாகவும் தி.மு.க. தலைமை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்துமுறை தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சி தி.மு.க. அந்தக் கட்சியின் முக்கியப் பகுதியான கொங்கு மண்டலத்தில் கட்சிக்குள்ளே துரோகம் செய்பவர்கள் இருப்பதால் கட்சி அங்கு பலவீனமடைந்தது. இதனால் தேர்தல் வெற்றிகளில் பின்னடைவும் ஏற்பட்டது. இவை தி.மு.க.வை ஆட்சியைவிட்டு பத்து வருடமாக எதிர்க் கட்சி வரிசையில் அமர்த்தியது. இந்நிலையில் கொங்குமண்டலத்தில் புகாருக்குள்ளான கட்சி முக்கியஸ்தர்கள் மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை கொங்குமண்டலம் என்பது இப்போது முதல்வராகவுள்ள எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்டலமாகும். இந்த மண்டலத்தில் தி.மு.க.வை வலுப்படுத்த கட்சித் தலைவர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். இதன் பலன் என்னவென்பது அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலின் முடிவில் தெரியவரும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • தொ.ரா.ஸ்ரீ.