இலங்கையில் தமிழை ஓரங்கட்டும் கோத்தபய அரசு!

slider அரசியல் உலகம்

 

கோத்தபய ராஷபக்சே

 

 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 2009-ம் ஆண்டு போர் நடைபெற்றது. இதில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு 2016-ம் ஆண்டில் அமைந்த அரசு ஒரு சில சலுகைகளை வழங்குவதாக அறிவித்தது. அதில் ஒன்றுதான் இலங்கையில் சுதந்திர தினத்தின்போது சிங்களம், தமிழ் என்று இருமொழிகளிலும் தேசியகீதம் பாடப்படும் என்கிற உறுதிமொழி. இந்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு வரையும் சுதந்திர தினத்தின்போது தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. தற்போது இந்த ஆண்டு நடைபெறவுள்ள சுதந்திர தினத்தின்போது சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாடப்படும் என்று கோத்தபய ராஜபக்‌ஷே அரசு அறிவித்துள்ளது. இது ஈழத் தமிழர்கள் மத்தியில் பெருத்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த  2009-ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகு இலங்கையில் பெருவாரியாக வாழும் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடும் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், சமீபத்தில் நடந்த தேர்தலில் சிங்கள சமூகத்தைப் பெருவாரியாகக் கொண்ட கோத்தபய ராஜபக்சவின் கட்சி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த  ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள 72-வது சுதந்திர தினத்தில் இலங்கையில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவது நிறுத்தப்படவுள்ளது. இதை இலங்கை உள்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாகத் தற்போது தெரிவித்துள்ளது. ஆனால், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் தேசிய கீதத்தைத் தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் பாடுவதை அனுமதித்த போதிலும் இலங்கை அரசு இந்த திடீர் முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து  தமிழ் கூட்டமைப்புகளின் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் கூறுகையில், “இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது என்பது வேறு பாடல் ஒன்றும் இல்லை. இலங்கைத் தாயே என்ற சிங்கள மொழியில் இருப்பதை அப்படியே தமிழில் பாடுகிறோம். இது இலங்கையில் வாழும் தமிழர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு எதிராக இலங்கை உள்துறை அமைச்சர் மணிந்தா சமரசிங்கே கடந்த வாரம் ஒரு பேட்டிளித்துள்ளார். அப்போது அவர்  “இலங்கையில் இனிமேல் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும். ஆனால், பிராந்திய அளவில் தமிழ் மொழியில் பாட அனுமதிக்கப்படும்” எனக் கூறியிருந்தார். ஆனால், ஒட்டுமொத்தமாகத் தமிழ்மொழியில் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது என்பதாக இலங்கையிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னோட்டம் கடந்த நவம்பர் மாதமே நடந்துவிட்டது. அப்போது இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவி ஏற்பு விழாவில் பேசுகையில், “நான் அதிபராவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது பவுத்தர்களின் ஆதரவுதான். இருப்பினும் அனைத்து சமூகத்தினரைக் காக்க நான் உறுதி ஏற்பேன். அதேசமயம் அதிகமான முக்கியத்துவம் பவுத்த மதத்துக்கு வழங்கப்படும். என்னைத் தேர்வு செய்த சிங்க மக்களுக்கு நன்றி” என்று பேசினார்.

ஏற்கெனவே அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலே நிலவும் என்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கூறிவரும் நிலையில், இப்போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது அவர்கள் கவலையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு இனக் கலவரம் அரங்கேறுமோ என்கிற அச்சமும் இந்த இரு சிறுபான்மை மக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு சர்வதேச சமுதாயம் உடனடியாக ஏதேனும் முன்நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று இப்போதே புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் பக்கமிருந்து வேண்டுகோளும் கோரிக்கையும் பலமாகவே ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

விசாகன்