அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா!

slider விளையாட்டு

 

தென்னாப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த உலகப் கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியா ஏற்கெனவே தகுதியாகிவிட்டது. 31.1.2020 அன்று நடைபெற்ற நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

எதிர்பார்ப்பு அதிகம் நிலவிய பரபரப்பான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான பர்ஹான் ஜாகில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். முடிவில் ஆப்கானிஸ்தான் 49.1 ஓவரில் 189 ரன்கள் சேர்த்தது.

இதன்பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான்  அணி பேட்டிங்கை தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் மொகமது ஹரைரா ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்களும் கணிசமான ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 41.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் மூலம் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளன. அவை இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளாகும். இதில்  பாகிஸ்தானோடு இந்தியா அரையிறுதியில் மோதுகிறது, நியூசிலாந்தோடு வங்காளதேசம் மோதுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அரையிறுதி ஆட்டம் வருகிற 4-ம் தேதி நடக்கிறது. வரும் 6-ம் தேதி நடக்கும் அரையிறுதிப் போட்டியில் வங்காளதேசம் – நியூசிலாந்து அணிகள்  மோதுகின்றன. இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதில் மோதுவதைகாண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

நந்தன்