மு.க.அழகிரி பேச்சால் தி.மு.க. தலைமைக்கு இடையூறு வருமா?

slider அரசியல்

 

முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக உள்ளார். இன்னொரு மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி மதுரையில் வசித்து வருகிறார். கலைஞர் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பே கட்சியை விட்டு நீக்கப்பட்டார் மு.க.அழகிரி. இதன்பின்னர் அழகிரியை கருணாநிதி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள இருக்கிறார் என்றும், இதற்கு ஸ்டாலின் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்தன. கருணாநிதி உயிரோடு இருந்த வரையில் அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையிலே இப்போதுவரை நீடிக்கிறது. இந் நிலையில்தான் தற்போது தி.மு.க. குறித்து அழகிரி பேசியிருப்பது பெரும் பரபரப்பாகியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. முன்னால் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி மதுரையில் நடைபெற்ற தனது தீவிர ஆதரவாளரான வழக்கறிஞர் மோகன் குமார் இல்ல திருமண விழாவில் 30.1.2020 அன்று கலந்து கொண்டார்.

இந்தத் திருமண விழாவில் மு.க. அழகிரி பேசும்போது, “ஒருவர் மட்டுமே கருணாநிதியின் மகன் அல்ல. நானும் கருணாநிதியின் மகன் தான். இந்தக் காலத்தில் நன்றி மறந்து நடந்துகொள்வது மிக எளிதாகிவிட்டது. அ.தி.மு.க.வினர் கூட என்னைச் சந்தித்தால் பேசுகிறார்கள். உடன் பழகிய தி.மு.க.வினர் என்னைக் கண்டாலே ஒளிந்து கொள்கிறார்கள். என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த நிலை எப்போது மாறும் எனவும் எனக்குத் தெரியும்’’ என்று பேசியுள்ளார்.

ஜனவரி 30-ம் தேதி அழகிரி பிறந்தநாள். வழக்கமாக மு.க.அழகிரியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கறி விருந்துடன் குறைந்தது மூன்று நாட்களுக்காவது திருவிழாவை போல் மதுரையில் நடத்துவர். தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்ட பின்னர் கேக் வெட்டுவதோடு கொண்டாட்டங்களை நிறுத்திக் கொண்டனர். மேலும், கருணாநிதி மறைந்தது முதல் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அறவே தவிர்த்த அழகிரி இந்தாண்டும் எந்த ஏற்பாடும் வேண்டாம் என்பதில் மிக உறுதியாக இருந்து வந்தார். இந்நிலையில், அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான கோபிநாதன், மன்னன், ராஜூ போன்றோரும் அழகிரியை அவரது பிறந்தநாளன்று எப்படியாவது மதுரையில் இருக்க வைக்க விருப்பப்பட்டனர். அதற்கு இந்த திருமண விழா வழியமைத்துக் கொடுத்தது. இதனிடையே அழகிரி பிறந்தநாளுக்காக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.விலிருந்து ஒதுங்கியிருந்த அழகிரி இப்போது திருமண விழாவில், மறைமுகமாக ஸ்டாலினை எச்சரிக்கும் விதத்தில் பேசியுள்ளது தி.மு.க.வுக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் வரும் நாள்களில் தி.மு.க. தலைமைக்கு தலைவலி கொடுக்கும் சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிர பேச்சு கிளம்பியுள்ளது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்