தே.மு.தி.க.வின்     ‘விஜய்காந்த் ஆட்சி’ பேச்சால் அதிர்ச்சியில் அ.தி.மு.க.!

slider அரசியல்

 

ஆளும் கட்சியாக இருக்கிற அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் கணிசமான ஓட்டு வங்கியை  வைத்திருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளுமே தங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்ட கட்சிகள் தான். இதில் கொஞ்சநாளாக ஆட்சிக்கு வரும் கோஷத்தை பேசாமல் இருந்த தே.மு.தி.க. தலைமை மீண்டும் இப்போது பேசத் துவங்கியுள்ளது. தே.மு.தி.க.வின் இந்தப் பேச்சால் அ.தி.மு.க.வின் இரட்டை தலைமைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பாகியுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்-பிரேமலதா தம்பதிகள் திருமணமாகி 29-ம் வருடம் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு 31.1.2020 அன்று எல்.கே.சுதீஷும் அவரது துணைவியாரும் மாலை அணிவித்து வாழ்த்து விஜயகாந்த் – பிரேமலதா  தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனுடன் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தே.மு.தி.க. பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியும் இணைத்து நடத்தபட்டது.

இந்தக் கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் பேசும்போது, “மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் வருவேன். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்து’’ என பேசியுள்ளார்.

அடுத்ததாக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்   பேசும்போது, “தொண்டர்கள் தான் எங்கள் குடும்பம். எங்கள் திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணித் தான் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க. தான். கூட்டணி  என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம். குட்ட குட்ட குனியும் ஜாதி இல்லை தே.மு.தி.க.. நாங்கள் மீண்டு எழுவோம். 2021-ம் ஆண்டு தேர்தலுக்காக கிராமம் கிராமமாக சென்று சுற்றுப்பயணம்  மேற்கொள்வோம். விஜயகாந்த் மீண்டும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வார். 2021-ம் ஆண்டு தேர்தலில் தே.மு.தி.க. மிகப்பெரிய கட்சியாக வரும். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவது தான் நோக்கம். விஜயகாந்த் ஆட்சி வரும் வரையில் ஓயமாட்டோம்’’ என்று அதிரடியாக பேசியுள்ளார்.

அ.தி.மு.க.வின்  இரட்டை தலைமையைப் பொறுத்தவரை தங்களுடன் பா.ம.க. பா.ஜ.க., தே.மு.தி.க. என்கிற இப்போதிருக்கும் கூட்டணியுடனே அடுத்த வருடம் வரவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க முடிவு எடுத்தே காய்களை நகர்த்தி வருகிறது. இந்தக் கூட்டணி அமையும் பட்சத்தில் மட்டுமே தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் என்கிற கூட்டணியுடன் போதுமான பலத்துடன் போட்டி போடமுடியும் என்கிற எண்ணத்தில் இருந்து வருகிறது. இப்படியான கணக்கை இடைஞ்சல் செய்யும் விதமாக இருக்கிறது தே.மு.தி.க. தலைமையின் ‘விஜயகாந்த் ஆட்சி’ என்கிற பேச்சு.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருப்பதால் எப்படியாவது இதனை சமாளித்துவிடலாம் என்று நம்புகிறது அ.தி.மு.க.வின் தலைமை.

– எம்.டி.ஆர்.ஸ்ரீதர்