டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபடாதது ஏன்!

slider அரசியல்

 

இந்தியாவின் தலைநகரான டெல்லி யூனியனில் வரும் பிப்ரவரி
8-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இரண்டு முறை தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது ஆம் ஆத்மி. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். இந்தமுறை டெல்லியைக் கைப்பற்றுவதை தனது கௌரவ பிரச்னையாக எடுத்துக் கொண்டுள்ளது மத்தியில் ஆட்சியிலுள்ள பா.ஜ.க. இதற்காக மத்திய உள்துறை அமைச்சரும், முன்னாள் கட்சித் தலைவருமான அமித்ஷா தீவிர பிரசாரத்தில் கடந்த பத்து நாளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறார். இன்னும் தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் தறுவாயில் பிரதமர் மோடி ஒருமுறைகூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். இந்த விஷயம் பா.ஜ.க. கட்சிக்குள்ளே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு வரும் பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி யூனியன் பிரதேசத்திலுள்ள  70 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் டெல்லியில் நடக்கும் தேர்தலுக்காக பிரதமர் மோடி ஒருமுறை கூட பிரச்சாரம் செய்யவில்லை. குறிப்பாக, மோடி பிரச்சாரம் செய்தால் அங்கு பா.ஜ.க. எளிதாக வெற்றிபெறும். வட மாநிலங்களில் மோடி பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் பா.ஜ.க. எளிதாக வென்றிருக்கிறது.  உதாரணமாக, உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் மோடியின் பிரச்சாரம் வெற்றிக்கு பெரிதும் உதவியது. யார் வேட்பாளராக இருந்தாலும் கூட, மோடியின் பிரச்சாரத்தை பார்த்துவிட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர். ஆனால், இந்தமுறை டெல்லி தேர்தலுக்காக மோடி இதுவரை ஒருமுறைகூட பிரசாரம் செய்யவில்லை. தேர்தல் அறிவித்து ஒரு மாதம் ஆகிவிட்டது.  எல்லாக் கட்சி சார்பிலும் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. டெல்லி தேர்தல் தொடர்பாகவும் வேறு எங்கும்கூட மோடி எதுவும் பெரிதாக பேசவில்லை. குடியரசுத் தின உரை மற்றும் மான் கி பாத் ஆகியவை மட்டுமே சமீபத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் டெல்லியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். டெல்லியின் அனைத்து தொகுதியிலும் அமித் ஷா ஏறத்தாழ பிரச்சாரம் செய்து முடித்துவிட்டார். இதனால் பா.ஜ.க.வின் ஸ்டார் பிரச்சாரக்காரராக அமித் ஷா உருவெடுத்து இருக்கிறார். மோடியின் இடத்தை இந்த முறை அமித் ஷா நிரப்பி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். மேலும், சமீப நாட்களாக பா.ஜ.க.வில் அமித்ஷாதான் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுகிறார். இதற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. நெருப்பில்லாமல் புகையாது என்கிற பழமொழி அரசியலுக்கு பொருந்தும். இன்னும் கொஞ்சநாளில் ஒருவேளை நெருப்பு இருப்பது உண்மையானால் தானாக தெரியவரும் என்கிற பேச்சும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் சூறாவளியாக வலம் வருகிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • தொ.ரா.ஸ்ரீ.