உயர்நீதிமன்ற உத்தரவால் நின்றுபோன சசிகுமார் படம்!

slider சினிமா
நாடோடிகள் 2 படத்தில் சசிகுமார்-அஞ்சலி

 

சமுத்திரக்கனி இயக்கத்தின்ல நடிகர் சசிகுமாரும், நடிகை அஞ்சலியும் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ‘நாடோடிகள்-2’. இந்தத் திரைப்படம் 31.1.2020 அன்று வெளியாகவுள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டது. ஆனால், படம் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சில நாள்களுக்கு முன்பு இந்தத் திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு எப்.எம். பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பிரவீண்குமார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், படத் தயாரிப்பாளர் நந்தகுமார், தனக்கு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்பதால், படத்தின் உரிமை தனக்கே சொந்தம் என அறிவிக்கவும், படத்தை வெளியிட தடை விதிக்கவும் கோரியிருந்தார்.

உயர்நீதிமன்றம் படத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததால்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘நாடோடிகள்-2’  படம் வெளியாகவில்லை. தனது உத்தரவில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையோடு ‘மனுதாரர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டிய ரூ.1.75 கோடியை இரண்டு வாரத்துக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கான ஆதாரத்தை இந்த உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி
14-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்றும் கூறியிருக்கிறது. எனவே, பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்கிற தகவல் தெரியவரும்.