ரஜினிக்காக காய்நகர்த்தும் கமல்!

slider அரசியல் சினிமா
rajini-kamal

 

தமிழகத்தில் பிரபலமான நடிகராகவுள்ள கமல் இரண்டு வருடத்திற்கு முன்பு  ‘மக்கள் நீதி மய்யம்’ என்கிற கட்சியை ஆரம்பித்தார். இந்தக் கட்சியை ஆரம்பித்தபிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வந்தார். அடுத்து கிராம சபை கூட்டங்களையும்  ‘மக்கள் நீதி மய்யம்’ நடத்த அதிலும் கமல் பங்கு கொண்டார். இதன்பிறகு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நான்கு சதவீத ஓட்டுக்களை கட்சியும் பெற்றது. ஆனால், இதன்பிறகு கட்சி நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது. கமலும்  ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கப் போய்விட்டார். சமீபத்தில் மீண்டும் மக்கள் சந்திப்பை கமல் நடத்தப் போகிறார் என்றும் தகவல் வெளியானது. அது குறித்தும் உறுதியான முன்னெடுப்புகள் இல்லாததால்  ‘மக்கள் நீதி மய்யம்’ நிர்வாகிகள் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுவதால் பெரும் பரபரப்பாகியுள்ளது.

இதற்குக் காரணமாக கமலுக்கு இரண்டு மாதத்துக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், அதன்பின் பிசியோதெரபி சிகிச்சையில் அவர் தொடர்ந்து இருக்க வேண்டியிருப்பதும் சொல்லப்பட்டது. ஆனாலும், கமல் மீண்டும் இயல்பு நிலைமைக்கு திரும்பிவிட்டதாக ஓர் அறிவிப்பு வந்தது. ஆகவே, கட்சியின் செயல்பாடுகள் மந்தமாகப் போனதுக்கு கமலின் உடல்நிலை காரணமில்லை என்பது உறுதியாகிறது. இதுமாதிரியான குழப்ப நிலைகளால்  ‘மக்கள் நீதி மய்யம்’ நிர்வாகிகள் மத்தியில் ஒருவித நம்பிக்கையற்ற சூழல் நிலவுவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்பு மண்டலவாரியாக கட்சியை வலுப்படுத்த உள்ளோம் என்று   பல புதிய முகங்களைத் தேடி அழைத்து வந்து கட்சியில் இணைத்தார் கமல். உதாரணத்துக்கு தொழிலதிபர்களான அருப்புக்கோட்டை உமாதேவி, திருச்சி முருகானந்தம் ஆகியோருக்கு மாநில பதவி அளித்தார். இதன்பின் கட்சி நடவடிக்கை என்றால் குடியுரிமைச் சட்டத்துக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு கடந்த டிசம்பரில் தனது அலுவலகத்திற்கு செய்தியாளர்களை அழைத்து, தனது கருத்தைக் கூறியதோடு சரி, அதன் பின்னர் எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் கமலைக் காண முடிவதில்லை. அதற்கு பிறகு ஒரேயொரு முறை திருச்சியில் வைத்து மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளை வரவழைத்து கூட்டம் நடத்தினார். அதிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கமல் தீவிரமாக எதுவும் பேசவில்லை. இவைகளெல்லாம் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சோர்வடைய செய்துள்ளதாக  ‘மக்கள் நீதி மய்யம்’ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பெரியாரைப் பற்றி உயர்வாக பேசுபவர். ஒருமுறை அவர் பெரியார் திடல் சென்று அங்கு வீரமணியால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இப்படியான கமல் இப்போது அரசியல் கட்சித் தலைவராகவும் ஆகிவிட்டார். பெரியாரைப் பற்றி இவரது சக போட்டியாளரான ரஜினி விமர்சிக்கிறார். மேலும், அந்த விமர்சனத்துக்கு கண்டனங்கள் எழுந்தபோதும், ’மன்னிப்பு கேட்கமாட்டேன்’ என்று ரஜினி பேசுகிறார். இப்படியொரு நிகழ்வு தமிழகத்தில் நடக்கிறது. ஆனால், இது குறித்து கமல் வாய்திறக்கவில்லை. கமல் நடிகராக இருந்தால் அவர் பதில் சொல்லவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். இன்று அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர். இதனால் அவர் கருத்து பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கமல் வாய்திறக்கவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் தனக்கு பெரியார் முக்கியமில்லை. மேலும், ஒருவேளை தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி வைக்கும் சந்தர்ப்பம் வந்தால் இதனால் இடைஞ்சலாக போய்விடுமோ என்று நினைத்து மௌனமாகிவிட்டாரோ என்றும் சிலர் பேசுகின்றனர். இதுபற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியாவிட்டாலும் அப்படி இருக்கும்பட்சத்தில் தேர்தலை மனதில் வைத்து கட்சி நடத்தும் ஒருவராக கமல் தகுதி பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

  • தொ.ரா.ஸ்ரீ.