புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு ஆப்பு!

slider அரசியல்
கிரண்பேடியுடன் தனவேல் எம்.எல்.ஏ

 

கடந்த பத்து தினங்களுக்கு முன்பு ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான தனவேலு, புதுவை கவர்னர் கிரண்பேடியை சந்தித்தார். அப்போது புதுச்சேரி முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மீது 100 கோடி ரூபாய் நிலபேர ஊழல் புகார் பட்டியல் அடங்கிய புகார் ஒன்றை அளித்தார். இதனால் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இவர் மீண்டும் இதே விவகாரத்துக்காக புதுவை கவர்னரை 29.1.2020 அன்று சந்தித்துள்ளது புதுவை அரசியலில் மீண்டும் பூகம்பமாக வெடித்துள்ளது.

பாகூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு. இவர் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு கவர்னர் கிரண்பேடியை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்தார். இந்த விவகாரம் அப்போது புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனவேலு எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து புதுவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். மேலும், இது குறித்து தனவேலுவிடம் விளக்கம் கேட்டு கட்சி சார்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில்தான் புதுச்சேரி நாராயணசாமி அரசின் பல்வேறு முறைகேடுகளை கண்டித்தும், முதல்வர் நாராயணசாமி பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தியும் 29.1.2020 அன்று காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலு தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பாகூர் பொதுமக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீதி கேட்டு ஊர்வலமாக கவர்னர் மாளிகைக்கு வந்தனர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதன் பின்னர் தனவேலு எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கவர்னர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

புதுவை  கவர்னர் கிரண்பேடியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தனவேலு, “சபாநாயகர் சிவகொழுந்து, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் முதலமைச்சரின் மகன், அவருடைய சம்மந்தி உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் மீது நில மோசடி தொடர்பாக 100 கோடி ரூபாய்க்கான ஊழல் குறித்து ஆதாரத்துடன் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.   இந்த ஊழல் பட்டியலை அரசு அதிகாரிகள் உதவியுடன் தயாரித்தேன். மேலும், பல்வேறு தகவல்களை சேகரித்து வருகிறேன். இந்த ஊழல் புகார் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சி.பி.ஐ. மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அளிக்கவுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அனேகமாக, இந்த ஊழல் விவகாரம் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு பெரிய ஆப்பாக அமைய அதிக வாய்ப்பிருப்பதாகவும், இதுமட்டுமில்லாமல் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட இதில் சம்பந்தபட்டவர்கள் சி.பி.ஐ. வழக்கை சந்திக்கவும் நேரிடலாம் என்கிறார்கள் புதுச்சேரி அரசியல் விமர்சகர்கள்.

 -குருபரன்