ராமதாஸின் போராட்டத்தை அமைச்சர் மூலம் நிறுத்திய முதல்வர்!

slider அரசியல்

 

pmk leader ramadas

 

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சராக செங்கோட்டையன் இருக்கிறார். இந்தத் துறையின் சார்பில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் இந்த தேர்வை ரத்துச் செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் பா.ம.க. சார்பில் இன்று (28.1.2020) தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை எற்படுத்தியுள்ளது.

இன்று (28.1.2020) பா.ம.க. சார்பில் நடைபெறவிருந்த தொடர் முழக்க போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி  நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஜி.கே.மணி, “தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இது குறித்து அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் மருத்துவர் அய்யா அவர்களிடம் அமைச்சர் தெரிவித்தார். அதையேற்று பா.ம.க. நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  அதைக் கேட்ட மருத்துவர் அய்யா அவர்கள் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டும் தான் இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்றும், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருப்பதாகவும் கூறினார். மேலும், பொதுத்தேர்வை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டார்.  அதையேற்ற பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் உறுதியளித்தார். பள்ளிக்கல்வி அமைச்சரின் இந்த வாக்குறுதியை பா.ம.க. சார்பில் நடைபெறுவதாக இருந்த தொடர்முழக்கப் போராட்டம் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க. தலைவர் இந்த விஷயத்தில் மிகவும் திட்டவமாக இருந்து வந்தார். இந்த பொதுத் தேர்வு முறையை நிரந்தரமாகவே நிறுத்த வேண்டுமென்றே பேசி வந்தார். இதற்காக கூட்டணி கட்சிதான் என்றபோதும் தமிழக அரசை எதிர்த்து போராட்டம் அறிவித்தார். இந்நிலையில்தான் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதும், போராட்டம் நிறுத்தப்பட்டதும் நடந்துள்ளது. ஏற்கெனவே கூட்டணியில் இருந்துவரும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வுக்கு பல விஷயங்களில் ஒத்துப்போகாத நிலை இருந்து வருகிறது. இந்தமாதிரியான சூழ்நிலையில் முக்கிய கட்சியான பா.ம.க.வும் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்திடுமானால் அது தி.மு.க.வுக்கு வலு சேர்ப்பதாக ஆகிவிடும் என்று முதல்வருக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படி முதல்வர் அமைச்சர் செங்கோட்டையனிடம் சொல்லி இந்த போராட்டம் நிறுத்தப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

  • நிமலன்