தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு – தடுமாறும் அ.தி.மு.க. தலைமை!

slider அரசியல்

 

தஞ்சை-பெரிய-கோவில் 

 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் வரும் 5-ம் தேதி குடமுழுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதை முன்னிட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்று 28.1.2020 அன்று அறநிலையத்துறை மூலமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழில் மட்டும்தான் குடமுழுக்கு என்பதில் தமிழ் அமைப்புகள் அழுத்தமாக இருப்பதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது சலசலப்பை எற்படுத்தியுள்ளது.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு கும்பாபிஷேக விழாவை தமிழில் நடத்த வேண்டும் எனக்கோரிய வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், அறநிலையத்  துறையினரை பதில் மனுதாக்கல் செய்ய முன்பு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 28.1.2020 அன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தஞ்சை பெரிய கோவில்  குடமுழுக்கு கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என பதில் அளிக்கப்பட்டது.  இதனையடுத்து இந்த பதிலை நாளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  பலகட்டங்களாக வலியுறுத்தி வருகிறார்.

இது குறித்து தனது டுவிட்டரில்,  ‘தமிழ்நாடு அரசே! தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலுக்கு தமிழில் – தமிழர் மரபுப்படி திருக்குடமுழுக்கை நடத்த ஆணையிடுக’ என பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்னர் “தஞ்சை பெரியகோயில்  குடமுழுக்கு கும்பாபிஷேகத்தை தமிழில் மட்டும் தான் நடத்தவேண்டும்” என்று  வலியுறுத்தி தமிழ் அமைப்பைச் சேர்ந்த பெ.மணியரசன் தஞ்சையில் மாநாடே நடத்தியுள்ளார். ஆனால், அறநிலையத்துறை சார்பில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதிற்கு தனது எதிர்வினையாக, “தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது. தஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி பிப்ரவரி 1-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ என்றும் தெரிவித்துள்ளார் பெ.மணியரசன்.

இந்த விவகாரத்தில் தமிழ் அமைப்புகள் தமிழில் தான் குடமுழுக்கு என்பதில் தீவிரமாக இருந்து வருகின்றன. ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருந்து வருகிறது. அரசு சார்பில் முடிவு எடுத்தால் அது அ.தி.மு.க.வுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாக்குமோ என்கிற கவலையும் அ.தி.மு.க.வின் தலைமைக்கு வரலாம். இதனால் இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னமாதிரி முடிவெடுக்கப் போகிறார் என்பதை பலரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • விசாகன்