ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள்!

slider விளையாட்டு
கங்குலி

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கோடை விடுமுறையை மனதில் வைத்துதான் 2008-ம் ஆண்டிலிருந்து நடத்தப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த 2020ம் வருடத்துக்கான வீரர்கள் ஏலமும் முடிந்துவிட்டது. ஆனால், இந்தமுறை போட்டி நடக்கும் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கொஞ்சநாளாக பரவி வந்தது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து முடிவு செய்ய ஐ.பி.எல். நிர்வாக கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம்  நேற்று (27.1.2020) டெல்லியில் நடைபெற்றது. இந்தக்  கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.சி.சி.ஐ. தலைவர் சௌரவ் கங்குலி, “ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இரவு ஆட்டங்களை தொடங்கும் நேரத்தை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.  இரவு எட்டு மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 7.30 மணிக்கு தொடங்கலாம் என பேசப்பட்டது. சரியான முடிவு எட்டப்படாததால் எட்டு மணிக்கு தொடங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டியின் போது பௌலர்கள் வீசும் பந்தால் பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட்டில் தாக்கி தலையதிர்வு ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரை விளையாட செய்யும் புதிய விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல  ‘நோபால்’ என ஆடுகள நடுவர் முடிவு செய்வதற்கு பதிலாக மூன்றாவது நடுவர் முடிவு செய்யும் புதிய விதிமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலியின் இந்தப் பதிலால் ஐ.பி.எல். எப்போது துவங்கும் என்கிற வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக கருத்து வெளியிட்டுள்ளனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.