ஆ.ராசா, கனிமொழி – வலைவிரிக்கும் சி.பி.ஐ.!

slider அரசியல்
ஆ.ராசா-கனிமொழி

 

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது, 2ஜி ஊழலுக்காக அவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி மீதும், மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து கைது செய்து திகார் சிறையிலும் அடைத்தது. இந்த வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் 2017–ம் ஆண்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு 2018 – ம் ஆண்டில் ஊழல் விவகாரத்தில் புதிய ஊழல் தடுப்பு சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இதனடிப்படையில் ஆ.ராசா, கனிமொழி உட்பட  2 ஜி வழக்கிலிருந்து விடுக்கப்பட்டவர்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது சி.பி.ஐ. இப்போது இந்த முறையீடு செல்லாது என்று ஆ.ராசா  டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது.

மத்திய தொலை தொடர்பு சேவை துறையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ‘2ஜி’ அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் சில நிறுவன உயரதிகாரிகள் உள்ளிட்ட, 17 பேர் மீது, சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 2017-ம் ஆண்டு டிசம்பரில் அனைவரையும் விடுவித்தது.   இதை எதிர்த்து 2018-ம் ஆண்டு மார்ச்சில் சி.பி.ஐ. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு என்பது 2018-ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இயற்றப்பட்ட புதிய ஊழல் தடுப்பு சட்டத்தின்பேரில் செய்யப்பட்டது.

இதனை எதிர்த்துதான் தற்போது ஆ.ராசா டெடில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘’2ஜி வழக்கில், என்னையும் சேர்த்து அனைவர் மீதும் சி.பி.ஐ. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது. அதில் நாங்கள் 2017-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டோம்.  இந்நிலையில் புதிதாக 2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நாங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளது. புதிய சட்டத்தில் எங்கள் மீது சுமத்திய ஊழல் குற்றச்சாட்டின் தன்மை வரையறை செய்யப்படவில்லை. அதனால் சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு செல்லாது. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா தாக்கல் செய்த மனு நேற்று (27.1.2020) டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய சட்டம் தொடர்பாக மனுதாரர் எழுப்பிய பிரச்னை குறித்து ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டு விட்டதால், அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆ.ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ”ஏற்கெனவே ஓர் ஊழல் வழக்கில் இதே பிரச்னை குறித்து விசாரிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு விசாரணை நீதிமன்றம் கோரியுள்ளது.  அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இது தவிர புதிய சட்டத்திற்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தில் தனி வழக்கு உள்ளது. இத்தகைய சூழலில் இப்பிரச்னையை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பலாம்’’ என்று எடுத்துரைத்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஒத்தி வைத்தார். ஆ.ராசாவின் தனிச் செயலராயிருந்த ஆர்.கே.சந்தாலியா, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹூரா ஆகியோரும், சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2014 – ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வும் படுதோல்வி அடைந்ததுக்கு 2ஜி ஊழல் தான் பெரும் காரணமாக அமைந்தது என்று இன்றும் பேச்சிருக்கிறது. இந்த வழக்கில் மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் முதல் தடவை ஆட்சிக் காலமான 2017-ம் ஆண்டில் சி.பி.ஐ. நீதிமன்றத்தாலே மேற்கண்டவர்கள் விடுதலையும் பெற்றார்கள். இப்போது இந்த வழக்கு சி.பி.ஐ.யால் மீண்டும் தூசிதட்டப்படுகிறது. இதன் பின்னணியில் பா.ஜ.க.வுக்கு எதிராக அரசியல் ரீதியாக தி.மு.க. மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளும் காரணமாக இருக்கமுடியும் என்கிற பார்வையையும் எளிதில் தள்ளிவிட முடியாது என்றும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்