தி.மு.க.வை முந்தும் அ.தி.மு.க.!

slider அரசியல்

 

aiadmk-bjb

 

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசை பலவிதங்களிலும் காப்பாற்றும் மத்திய அரசாக மோடி அரசு இருந்து வருகிறதென ஊடகங்களில் நிறைய செய்திகள் வருகின்றன. ஆனால், தற்போது நடைமுறையில் பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க.வை முந்திக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க என்கிற வாதத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள். குறிப்பாக, எஸ்.ஐ. வில்சன் விவகாரம், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா விவகாரங்களில் பா.ஜ.க.வை எதிர்த்து தி.மு.க.வுக்கும் மேலாக அ.தி.மு.க. தரப்பிலிருந்து அம்புக் கணைகள் பாய்கின்றன. விரைவில் கூட்டணி முறிவுக்கும் இது வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

சமீபத்தில்   கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.ஐ. வில்சன் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் அ.தி.மு.க. அரசை மிக கடுமையாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சித்தார். மேலும், தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது எனவும் குற்றம்சாட்டினார்.

உடனடியாக இதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்தனர். ஆனாலும், பா.ஜ.க. தரப்பு இந்த விஷயத்தில் அ.தி.மு.க. அரசை விமர்சிப்பதை தொடர்ந்தது.  சில தினங்களுக்கு முன்பு எஸ்.ஐ.வில்சன் தொடர்பான டி.வி. விவாதம் ஒன்றில், பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நாராயணனுக்கும், அ.தி.மு.க.வின் மீடியா பிரதிநிதி ஜவஹர் அலிக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பா.ஜ.க.வின் நாராயணை தடித்த வார்த்தைகளால் ஒருமையில் விமர்சித்தார் ஜவஹர் அலி.

இந்த சம்பவத்தால் தமிழக பா.ஜ.க. தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவியது. இதனையடுத்து அ.தி.மு.க.விலிருந்து ஜஹவர் அலி நீக்கப்படவுள்ளதாகவும் ஒரு செய்தி கசிந்தது. ஆனால், ஜவஹர் அலி மீது அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை  எந்த நடவடிகையும் மேற்கொள்ளவில்லை.  மேலும்,  மீண்டும் டி.வி. விவாதங்களில் ஜவஹர் அலி, அ.தி.மு.க.வின் பிரதிநிதியாக பங்கேற்று வருகிறார்.

இவர் மீது அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்காததால் பா.ஜ.க. தரப்பு கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.   இன்னொரு சம்பவமான பெரியாரை ரஜினிகாந்த் அவதூறாக பேசிய விவகாரத்திலும் பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை துணிச்சலுடன் அ.தி.மு.க. வெளிப்படுத்தி வருகிறது. இன்னும் சரியாக சொல்லப் போனால் தமிழக அமைச்சர்களில் ராஜேந்திர பாலாஜியை தவிர துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி பலரும் வாய்ப்பு கிடைக்கும்போதெலாம் இந்த விவகாரத்தில் ரஜினியை கடுமையாக விமர்சிப்பதை தொடர்கின்றனர். இந்த விவகாரத்தில் தி.மு.க. தரப்பில் வைக்கப்படும் விமர்சனத்தைவிட அ.தி.மு.க. தரப்பில் வைக்கப்படும் விமர்சனங்கள் கடுமையாகவும் இருக்கிறது. அதிகளவிலும் இருக்கிறது. இதையெல்லாம் வைத்து மதிப்பிடுகையில் பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க. முந்துகிறது அ.தி.மு.க. என்று தாராளமாக சொல்லலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். –

-விசாகன்