டி.ஆர்.பாலுவின் கட்சி பதவி பறிப்பு – தி.மு.க.வில் சலசலப்பு!

slider அரசியல்
tr-balu

 

தி.மு.க.வில் கலைஞர் காலத்திலே மத்திய அமைச்சராகவும், கட்சி ரீதியாக முக்கிய பதவிகளிலும் இருந்தவர் டி.ஆர்.பாலு. இவர் தற்போது தி.மு.க.வின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும், கட்சியின் முதன்மை செயலாளராகவும் இருந்து வந்தார். இதில் தற்போதைய கட்சிப் பதவியான முதன்மை செயலாளர் பதவியிலிருந்து டி.ஆர்.பாலு நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக அந்தப் பதவியில் கே.என்.நேரு அமர்த்தப்பட்டுள்ளார். இந்த நியமனம் தி.மு.க.வுக்குள் சலசலப்பை உண்டாக்கியுள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன.

 

டி.ஆர்.பாலுவின் பதவி நீக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடுமையாக கொண்டுவரவுள்ளார் என்றும், அதன் ஆரம்பம்தான் தி.மு.க. பாராளுமன்றத் தலைவராகவும், கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் இருந்துவந்த டி.ஆர்.பாலுவிடமிருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இன்னொரு தகவலாக, மக்களவை துணை சபாநாயகர் பதவியை நமக்குக் கொடுக்க பா.ஜ.க. முன்வந்திருக்கிறது. அந்தப் பதவியை பெற்றுத் தருமாறு தலைமையை டி.ஆர்.பாலு அணுகியதாகவும்,  இதை ஏற்க மறுத்த ஸ்டாலின், ’ஏற்கெனவே பி.ஜே.பி. அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வரும் நாள்களில் கொண்டுவரப்போகும் பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றைக் கடுமையாக எதிர்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம். முன்னதாக, அ.தி.மு.க.வின் தம்பிதுரைக்கு அந்தப் பதவியைக் கொடுத்து, அவர்களுக்கு அனுசரித்துப் போகும் வகையில் செய்தனர். அதேபோல், அவர்கள் கொடுக்கும் பதவியை ஏற்றுக்கொண்டால் நாமும் அனுசரித்துப் போகவேண்டிய சூழல் ஏற்படும்” என்று கூறி டி.ஆர்.பாலுவின் கோரிக்கையை ஏற்க மறுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தி.மு.க.வில் உதயநிதியை இளைஞரணி செயலாளராக கொண்டுவந்ததிலிருந்து கனிமொழி தரப்பிலிருந்து முணுமுணுப்பு கேட்கத் தொடங்கியது. தி.மு.க.வைப் பொறுத்தவை டி.ஆர்.பாலுவை ராசாத்தி மற்றும் கனிமொழி தரப்பாக பார்க்கப்படுவதாகவும் சொல்லப்படுவது உண்டு. இதன் பின்னணியில்தான் டி.ஆர்.பாலுவிடமிருந்து முதன்மைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக கவனிக்க வேண்டியிருக்கிறது. மற்றபடி ஒருவருக்கு இரண்டு பதவிகள் கிடையாது என்பது எல்லாம் ஏமாற்று வேலை என்கிற பேச்சும் மூன்றாவது தரப்பாக பேசப்படுகிறது.

 

தொ.ரா.ஸ்ரீ.