காங்கிரஸ் எடுத்துள்ள புதிய ஆயுதம்!

slider அரசியல்

 

மத்திய எதிர்க் கட்சியான காங்கிரஸுக்கு பாராளுமன்றத்தில் மிக குறைவான பலம் இருந்தபோதும், தி.மு.க. உட்பட தங்களுடன் கூட்டணியாக இருக்கும் மற்றும் பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக எதிர்க்கும் கட்சிகளுடன் இணைந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றுவதை பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது. ஆனாலும், பெரும்பான்மை இருந்ததால் பா.ஜ.க. இரு அவைகளிலும் இந்த மசோதாவை நிறைவேற்றிவிட்டது. இப்படி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் இதனை எதிர்ப்பதை காங்கிரஸ் இன்னும் விட்டுவிடவில்லை. இப்போது பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு சட்டத்தின் நகலை கடிதம் எடுத்து அனுப்பியுள்ளது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ முகவரியிலிருந்து கட்சியின் கடிதமாக இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்துடன், ‘நேரம் கிடைக்கும்போது, இதைப் படியுங்கள்’ எனவும் குறிப்பிட்டிருக்கிறது.   மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டரில் ‘’பிரதமர் நரேந்திர மோடிக்கு, அரசியலமைப்பு சட்டத்தின் நகலை அனுப்பி வைத்துள்ளோம். அது, விரைவில் அவரது கைக்கு கிடைக்கும். நேரம் கிடைக்கும்போது இதை பிரதமர் படிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் அனைவரும் சமம் என கூறப்பட்டுள்ளது. மதம், ஜாதி என எந்த வேறுபாடும் காட்டக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை முற்றிலும் மீறும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளது’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க.வும், பிரதமர் நரேந்திர மோடியும் செயல்படுகின்றனர் என்று காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ராகுலும், பிரியங்காவும் எங்கு பிரசாரம் சென்றாலும், வேறு ஏதாவது நிகழ்ச்சி என்றாலும் இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள். குறிப்பாக, பிரதமர் மோடிக்கு அரசியல் அமைப்பு சட்டம் பற்றி போதிய அறிவில்லை என்கிற தொனியிலும் பேசுகிறார்கள். இந்நிலையில்தான் இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக காங்கிரஸ் சார்பில் பிரதமருக்கு இப்படியொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை பார்க்க வேண்டும் என்றும், காங்கிரஸை பொறுத்தவரை இந்த விவகாரத்தை எளிதில் விடப்போவதில்லை என்பதும், இதையே பா.ஜ.க.வுக்கு எதிராக பெரிய ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது என்பதாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நிமலன்