அமித்ஷாவுக்கு முன்னுரிமை – வருத்தத்தில் மத்திய அமைச்சர்கள்!

slider அரசியல்
amithsha-natta

 

பா.ஜ.க.வை பொறுத்தவரை இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தங்களது ஆட்சி இல்லாமல் தங்களை எதிர்க்கும் கட்சியான ஆம் ஆத்மி ஆட்சியில் இருப்பதை ஜீரணிக்க முடியாமல் தான் உள்ளது. இப்போது டெல்லியில் தேர்தல் பிரசாரங்கள் களைகட்டுகிறது. இந்தமுறை எப்படியும் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைமை மிகப்பெரிய வியூகங்களை வகுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரசாரமொன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், டெல்லியை உலகத் தரமிக்க நகரமாக மாற்றுவோம். அதைச் செய்யாவிட்டால் என் காதை பிடித்துக் கேளுங்கள்’’ என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பாகியுள்ளது.

டெல்லியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் கட்சித் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் நேற்று (26.1.2020) நடைபெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், “டெல்லியை காங்கிரஸ் 15 ஆண்டுகளும், ஆம்ஆத்மி 5 ஆண்டுகளும் ஆட்சி செய்தன. நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் டெல்லியை உலகத்தர நகரமாக மாற்றுவோம் என உறுதியளிக்கிறேன். அதுநடக்கவில்லை எனில், நீங்கள் வந்து என் காதை பிடித்துக் கேளுங்கள். நாடு முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் சுத்தமான நீர், சாலை வசதிகள், மின்சார வசதிகள் என ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொன்றில் முதலிடத்தில் உள்ளன. ஆனால், கெஜ்ரிவாலின் அரசு, பொய்யர்களின் பட்டியலில் மட்டுமே முதலிடத்தை பிடித்துள்ளது. பொய்யான வாக்குறுதிகள் அளிப்பது பற்றி ஆய்வு நடத்தினால் இந்த அரசு முன்னணியில் இருக்கும். தேசத்தை பிளவுப்படுத்த நினைக்கும் சிறு சிறு கும்பலை சேர்ந்தவர்களை ஓட்டு வங்கிக்காக கெஜ்ரிவால், காங்கிரஸின் ராகுல் ஆகியோர் காப்பாற்ற நினைக்கின்றனர். டெல்லியில் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இரு அறை கொண்ட வீடு கட்டித்தரப்படும்’’ என்று அமித்ஷா பேசியுள்ளார்.

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் என்று மும்முனை போட்டி நிலவுகிறது. கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மி அடுத்தமுறை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் அமித்ஷா டெல்லியை உலகத் தரமிக்க நகரமாக மாற்றுவோம். அப்படி செய்யவில்லையென்றால் என் காதைப் பிடித்து கேளுங்கள் என்று பேசியுள்ளதை பார்க்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க.வில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். நேற்றுவரை அமித்ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதவி இருந்தபோதும், அவர் கட்சித் தலைவராக இருந்தார். ஆகவே, அவருக்கு பிரதமருக்கு அடுத்தபடியான பிரசார முன்னுரிமை வழங்கப்பட்டன. இப்போது கட்சிக்கு நட்டா தலைவராகி விட்டார். இப்போதும் பழைய நடைமுறையே பின்பற்றப்படுவதை மோடியின் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் விரும்பவில்லை என்றும், இதற்கு விரைவில் மோடி ஒரு முடிவு எடுக்கவேண்டுமென்று விரும்புவதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

குருபரன்