நடிகர் சங்கத் தேர்தல் ரத்து – வருத்தத்தில் மூத்த நடிகர்கள்!

slider சினிமா

 

கடந்த வருடம் ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் செல்லாது எனவும், மறு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் என அண்மையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி, பாக்யராஜ் அணி என  இரண்டு அணிகள் போட்டியிட்டன. கடந்த வருடம் ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், மாவட்டப் பதிவாளர் இந்த தேர்தல் முடிவை நிறுத்தி வைத்தார். இதன் பிறகு நடிகர் சங்கத் தலைவர் விஷாலும், பொருளாளர் கார்த்தியும் தேர்தல் முடிவை நிறுத்தி வைத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்கள் சார்பில் தேர்தல் முடிவை வெளியிடக்கோரி நீதிமன்றத்தில் கேட்டிருந்தனர்.   இதனிடையே  நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னொரு வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நிதி முறைகேடு மற்றும் சங்கத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் குறித்த புகார்களை விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.  மேலும், பதவிக் காலம் முடிந்தபிறகு ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால், அப்படி நீட்டிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு மூலம் நடத்தபட்ட தேர்தலே செல்லாது எனவும் வாதிடப்பட்டது. மேலும், நடிகர் சங்கத் தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு தலையிடவில்லை எனவும் அரசுத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.  இந்தத் தேர்தல் சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வந்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் முன்பு ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்குகள் அனைத்திலும்  தீர்ப்பு வழங்கப்பட்டது.  அந்த தீர்ப்பில், “கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி அன்று நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது.  புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் அவர்களை நியமிக்கிறோம். ஏற்கெனவே நிர்வாகத்தை கவனித்துவரும் சிறப்பு அதிகாரி கீதா நியமனத்தை எதிர்த்த வழக்கிலும் சிறப்பு அதிகாரி கீதா நியமனம் செல்லும். அவர் தேர்தல் நடக்கும் வரை நிர்வாகத்தைக் கவனிப்பார். புதிய வேட்பாளர்கள், வாக்காளர் பட்டியலுக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும்.  தேர்தலுக்கான தயாரிப்புகளை மூன்று மாதத்தில் முடித்து தேர்தலை நடத்த வேண்டும். இதன் மூலம் புதிய வாக்காளர் பட்டியலுக்கான உறுப்பினர்கள் சரிபார்ப்பு அனைத்தும் முடிந்தபின் தேர்தலை நடத்தும் அதிகாரி தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார். அதன் பின்னர் வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகள் நடத்தப்பட்டு முறையாகத் தேர்தல் நடக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் சரத்குமார் மற்றும் ராதாரவி அணியை எதிர்த்து வெற்றி பெற்ற அணிதான் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. இந்த அணி நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான வேலைகளை முன்னெடுத்து நடத்தியது. இவர்களை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையிலான அணி போட்டியிட்டது. இந்தப் போட்டியே மோதலாக மாறி, அது நீதிமன்றம் வரை சென்று, அந்த விவகாரம் இப்போது தேர்தல் ரத்து வரை வந்துள்ளது. நடிகர்களிடையே ஒற்றுமை நிலவினால்தான் நலிந்த நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவும், உதவியும் கிடைக்கும் என்கிற நிலையில் இப்படி இரண்டு அணியாக, மூன்று அணியாக மோதிக் கொண்டால். அவர்கள் நிலை என்னாகுமோ? என்கிற கவலையில் திரையுலக மூத்தவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.