அச்சுறுத்தும் ஆட்கொல்லி கொரானா வைரஸ்

slider உலகம் மருத்துவம்
coronavirus

 

மனித அறிவியல் ஆற்றலுக்கு அவ்வப்போது சவால் விடுவதில் பிரபஞ்சமும் சளைக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிது புதிதாய் நோய்த் தொற்றுகள் உருவாகி மருத்துவ அறிவியல் உலகியலுக்கு சிக்கலை உருவாக்குவதும், அதற்கு புதிதாய் தடுப்பு மருந்துகளும், சிகிச்சை முறைகளும் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் வேறொரு புதிய நோய் உருவாவதும் இன்றும் இயற்கை நமக்கு விடுக்கும் சவால்தான்.

டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சிக்கன்குனியா என மருத்து உலகுக்கு அச்சம் தந்த இயற்கை இப்போது புதிதாக கொரானா எனும் வைரஸ் மூலம் தனது தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு வரையில் நாம் அறிந்திராத கொரோனா வைரஸ் எனும் பெயர் இப்போது உலகம் முழுக்க பிரபலமாகிவிட்டது. சீனாவில் தொற்றிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும், அதைத் தொடர்ந்து ஜப்பான், தாய்லாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 4 பேர் உள்ளாகியிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.

 

“கொரோனா வைரஸ் என்ன காரணத்தினால் பரவுகிறது’? இதைத் தடுக்க முடியுமா?  இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதா? கொரோனா வைரஸ் என்றால் என்ன?” இப்படியான கேள்விகள் சாமான்யன் முதல் அனைவரிடத்திலும் இப்போது எழுந்திருக்கிறது.

corona-virus

சரியாக 25 தினங்களுக்கு முன்னர், அதாவது 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள வுகான் மாநிலத்தில் வசித்து வந்தவர் தனக்கு அதிகப்படியான காய்ச்சலும் அதைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் அடிக்கடி வருகிறதாக தெரிவித்து மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் புதிய வைரஸால் அவருக்கு ஒரு தொற்று பரவி இருப்பதை உணர்ந்து கண்டறிந்தார்கள்.

 

இதைத் தொடர்ந்து சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் “இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக தாமதிக்கமால் மருத்துவரை அணுகவும்” என சீனா முழுக்க மக்களை வலியுறுத்தியது. என்றாலும், டிசம்பர் 31ம் தேதி நோய்த் தொற்றுக்கு ஆளான அந்த முதல் நபருக்கு ஏற்பட்ட பாதிப்பு போல் தற்போது சீனாவின் வுகான் மாநிலத்திலிருந்து 13 மாகாணாங்களிலுள்ள மக்களுக்கு அந்த நோய்த் தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது.

 

 

இந்த தொற்றுக்கு 90 சதவீதம் இந்த கொரோனா வைரஸ் குடும்பம் தான் என்பதை உறுதி செய்திருக்கிறது சீனா. ஏற்கனவே கொரனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை 7 வது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2019- nCoV (new strain of coronavirus) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் கண்டறிந்ததற்காக 2019 என்ற ஆண்டையும் n என்பது புதிய என்றும், CoV என்பது கொரனாவையும் குறிக்கிறது.

 

2002 ல் சார்ஸ் SARS- CoV என்னும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில்தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள் என்பதும் இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும்.

 

இந்த கொரோனா வைரஸ் தொற்றில் ஒன்றான MERS-CoV கொரனா என்பது 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை கேமல் ப்ளூ என்றும் அழைத்தார்கள். ஏனெனில், இது குதிரையிலிருந்து மனிதனுக்குப் பரவியது. இக்காய்ச்சலின் போது 800 மக்கள் வரை இந்த வைரஸ் தொற்றுக்கு பலியானார்கள்.

 

இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்தாலும் இன்றுவரை இந்த கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் வைரஸ் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் போது மருத்துவத்துறையும்  உலக  மக்கள்  அனைவரும்  பீதிக்கு  உள்ளாகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான காரணங்கள்

 

சீனாவின் வுகான் மாநிலத்தில் 1 கோடி 10 இலட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கிருக்கும் மக்களுக்குத்தான் இந்த வைரஸ் தொற்று முதலில் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் இந்த மாநிலத்தில் இருக்கும் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கொண்ட சந்தைப் பகுதி என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

சீனாவைப் பொருத்தமட்டில், அந் நாட்டில் ஆடு, கோழி தவிர பல தரப்பட்ட விலங்குகளின்  இறைச்சியையும், கடல் வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறார்கள். வுகான் மாநிலத்தில் உள்ள இறைச்சி விற்பனைக்கூடம் ஒன்றிலிருந்து விலங்குகளை வெட்டி விற்பனை செய்யும்போதுதான் முதன் முதலில் கொரானா வைரஸ் பரவியிருக்கிறது என்பதை அந் நாட்டு அரசு இப்போது கண்டறிந்துள்ளது. இந்த வைரஸானது மனிதர்களின் நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. மேலும், இவை மனிதனிடமிருந்தும் மனிதனுக்கு பரவும் என்றும் சீனா தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

அறிகுறிகள்

ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கியிருந்தால் அதற்கான அறிகுறிகள்  எப்படியிருக்கும் என்பதையும் சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. மனிதர்களின் உடல் சராசரி வெப்பத்தைக் காட்டிலும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்து காய்ச்சலும், இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக்கோளாறு உண்டாகும். தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும். இவையாவும் படிப்படியாக அதிகரிக்கும்.

 

பரவும்

கொரனா வைரஸ் மனிதனிடமிருந்து  மனிதனுக்கு பரவும் தன்மை கொண்டது. இதை சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அதே போன்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) மனிதனுக்கு மனிதன் இந்த கொரனா வைரஸ் தொற்று பரவுகிறது என்று உறுதி செய்துள்ளது. மேலும், இந்த கொரானா வைரஸ் காற்றில் பரவும் தன்மையும் கொண்டது என்பதால், இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்து, இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.

 மருந்து

உலக சுகாதார அமைப்பு சீனாவில் 300 பேருக்கும், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியாவில் ஒருவருக்கும் இத்தொற்று இருப்பதை அண்மையில் உறுதி செய்துள்ளது. இந்த மூவரும் சமீபத்தில் சீனாவில் இருந்து வந்தவர்கள். ஆனால், இது குறித்து இலண்டன் MRC- Centre For Global Infectious Disease Analysis at Imperial College London இந்த தொற்று 1700 பேரைக் கடந்து சென்றிருப்பதாக தெரிவித்துள்ளது. இதே போன்று University of Hongkong கொரனா வைரஸ் க்கு 1300க்கும் மேற்பட்டவர்களை தொற்றி இருக்கும் என்றும் கூறுகிறது.

 

கொரானா வைரஸை முழுமையாக குணப்படுத்த முடியாது. அதே நேரத்தில், இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு என்றும் கூறுகிறது மருத்துவத்துறை.சீனாவில் தானே இந்த கொரனா வைரஸ் தொற்று என்று அலட்சியம் கொள்ளாமல் நாமும் சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது.