மீண்டும் மக்களை சந்திக்க புறப்படும் கமல்!

slider அரசியல்

  

 

நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நெருங்குகிறது. அந்தக் கட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமே போட்டியிட்டுள்ளது. இதைத்தவிர வேறெந்த இடைத் தேர்தல்களிலோ, சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலே பங்கெடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் உள்ளாட்சிக்கு முன்பிருந்தே கமலின் மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடுகள் அரசியல் ரீதியாக குறைந்துபோனது. இடையில் கமல்ஹாசன் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கப் போய்விட்டார். இந்நிலையில், மீண்டும் தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தப்போவதாக தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக கிராமங்கள் தோறும் சென்று கிராம மக்கள் சபை கூட்டத்தைக் கூட்டிய கமல்ஹாசன், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இது கமலுக்கு அரசியல் ரீதியாக நல்ல பலன் கிடைக்கச் செய்தது. இதன் பின் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் அதேபோன்று கிராமங்கள் தோறும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.  இதன்மூலம் கமல் நடத்திய கிராம மக்கள் சபை பெரியளவில் தமிழக மக்களிடம் எடுபட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதன் செல்வாக்கே புதிய கட்சியாக இருந்தபோதும் கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அவரது கட்சி சுமார் 4 % வாக்குகளைப் பெற உதவியது.

இந்த செல்வாக்கை பின்புலமாக வைத்து தமிழக மக்களின் உயிர்நாடி விஷயங்களில் போராட களம் இறங்கியிருந்தால் கமல் கட்சி இப்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றிருக்கும் என்று விவாதம் செய்பவர்கள் அரசியல் வட்டாரங்களில் உள்ளார்கள். ஆனால், கமலோ மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், அதன்பிறகு இரண்டு இடைத் தேர்தல்கள் மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். இது அவரது அரசியல் பாதையில் பெரும் பின்னடைவை தந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதன்நடுவே ரஜினியோடு இணைந்து அரசியல் களம் காணவும் தயாராக இருக்கிறேன் என்று கமல் கூறியது மட்டுமே கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகு தற்போது மக்கள் நீதி மய்யம் அடுத்து வருடம் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கமலின் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியா கூறுகையில், “தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.அப்போது மக்களையும் சந்திக்க திட்டம் தயாராகி வருகிறது’ என்று’ தெரிவித்துள்ளார்.

கிராம மக்கள் சபைக் கூட்டத்தை நடத்தி பாராளுமன்றத் தேர்தலில் நான்கு சதவீத ஓட்டுக்களை அள்ளிய கமல் நிச்சயம் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சியை போட்டியிட செய்திருக்க வேண்டும். இதன்மூலம் கிராமத்தில் அந்தக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கும், கமலை கிராம மக்கள்  என்னமாதிரி மதிப்பிட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவியாக இருந்திருக்கும். இதன் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உட்பட வியூகம் வகுக்கவும் பயன்பட்டிருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 

குருபரன்