அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து?

slider அரசியல்

 

 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்தது. சசிகலா தலைமையிலான அணியின் சார்பில் எடப்பாடி முதலமைச்சரானார். இன்னொரு அணி ஓ.பி.பன்னீர்செல்வம் தலைமையில் அப்போது இயங்கிவந்தது. இந்த சமயத்தில் அ.தி.மு.க. அரசு மீது தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஓ.பி.எஸ். உட்பட 11 பேர் வாக்களித்தனர். கட்சி மாறி ஓட்டளித்ததாக அ.தி.மு.க. கொறடா இவர்களை பதவி நீக்கச் சொல்லி சபாநாயகர் தனபாலிடம் நோட்டீஸ் அளித்தார். இதன்பேரில் சபாநாயகரும் இந்த 11 பேருக்கும் நோட்டீஸும் அனுப்பினார். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடுத்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கில் 11 பேரும் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் சொல்கின்றன. இது அ.தி.மு.க. முகாமை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தாவி ஆளும் கட்சியில் சேர்ந்து மந்திரி பதவி பெற்ற எம்.எல்.ஏ. ஒருவரின் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் நான்கு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேரிடையாக அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். உட்பட 11 பேர் எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் வழக்குடன் ஒத்துப் போகிறது. இப்படி ஒத்துப்போன மணிப்பூர் வழக்கில் நான்கு வாரத்துக்குள் சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கறாராக உத்தரவிட்டிருப்பதை கவனிக்கையில்,  ஏற்கனவே நிலுவையில் இருக்கும்  தமிழக 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் குறித்து தமிழக சபாநாயகர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அப்படி எதுவும் தமிழக சபாநாயகர் எடுக்கவில்லையென்றால், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிபதி கடும் உத்தரவிடவும் அதிக வாய்ப்பிருப்பதாகவும் டெல்லி உச்சநீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்ப்பு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும்,  உச்சநீதிமன்ற மூத்த வக்கீலுமான கபில் சிபல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘”ந்த தீர்ப்பு சரியானது. இது நாட்டில் அரசியல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கட்சி தாவல் மீதான தடையை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணையில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு இதுபோன்ற கட்சி தாவல் விவகாரங்களை விசாரிக்கும் வகையில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

ஒருவேளை மணிப்பூர் வழக்கில் உச்சநீதிமன்றம் நடந்து கொண்டதைப் போல, தமிழக வழக்கிலும் நடந்து கொண்டால் சபாநாயகர் 11 பேர் எம்.எல்..ஏ. பதவியையும் நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இதனால் அ.தி.மு.க. கவிழ்ந்துவிடும். இது அ.தி.மு.க.வுக்கு பெரும் நெருக்கடி தரும் ஒன்றாக விரைவில் மாறவும் வாய்ப்பிருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

விசாகன்