நித்தியானந்தாவை கைது செய்ய தீவிர நடவடிக்கை! 

slider அரசியல்

 

சர்ச்சை சாமியாராக உருவெடுத்துள்ள நித்தியானந்தா விவகாரம் இப்போது இந்திய அளவிலிருந்து சர்வதேச அளவுக்கு விஸ்வரூபமெடுத்துள்ளது. பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீஸாரால் வழங்கப்படும் ‘புளூகார்னர்’ நோட்டீஸ் வழங்கப்படிருக்கிறது. இதுவரை நித்தியானந்தாவை கைது செய்வதில் இருந்துவந்த முட்டுக்கட்டை இந்த நோட்டீஸ் மூலம் நீங்கியுள்ளதாகவும், விரைவில் நித்தியானந்தானந்தா கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குஜராத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தனது மகள்களை கடத்தி சிறை வைத்துள்ளதாக பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் நித்யானந்தா மீது அகமதாபாத் போலீஸார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே கர்நாடகவில் நித்யானந்தா மீது பாலியல் வழக்கும் உள்ளது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவாகி, ஈகுவெடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என பெயர் சூட்டி தனி நாடாக அறிவித்தார்.

தனது தலைமறைவு இடத்திலிருந்து   தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்ட நித்தியானந்தா, தன் மீது போலீஸார் பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினார். இதற்கிடையே, அவரது ஆசிரமத்தில் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்ட இரு இளம் பெண்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரிய ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது நித்யானந்தா வெளிநாடு தப்பி சென்று விட்டதை போலீஸார் உறுதிபடுத்தினர். இதைத் தொடர்ந்து சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் போலீசாருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் சி.பி.ஐ. மூலம் சர்வதேச போலீஸை குஜராத் போலீஸார் அணுகி நித்யானந்தாவை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் வைத்தனர். இதன் அடிப்படையில் நித்யானந்தாவுக்கு எதிராக தற்போது சர்வதேச போலீசார் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

பொதுவாக   ’புளுகார்னர்’ நோட்டீஸ் என்பது குற்ற வழக்கில் தேடப்படும் ஒருவரின் அடையாளம், இருப்பிடம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து தகவல் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நாடுகள் சர்வதேச போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதாகும். இதன் மூலம் சர்வதேச போலீஸாரின் அதிகாரத்துக்குட்பட்ட 150 நாடுகளில் நித்யானந்தா எங்கு பதுங்கி இருக்கிறார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதுதவிர   தற்போது சர்ச்சை சாமியார்  நித்யானந்தா கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் ‘பெஸிஸ்’ பாஸ்போர்ட்டை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதை போலீஸ் அதிகாரிகள் யாரும் உறுதிபடுத்தவில்லை. நித்யானந்தா புதிய பாஸ்போட்டை பயன்படுத்தி எங்கும் பயணம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளனர். அதேநேரத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக ‘புளூ கார்னர்‘ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரது அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக கண்காணிக்கப்படும் என்றும்  கூறியுள்ளனர்.  அனேகமாக, இன்னும் கொஞ்சநாளில் நித்தியானந்தா கைதாக அதிக வாய்ப்பிருப்பதாக தமிழக காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்