மாவட்டச் செயலாளர்கள் சிலர் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்!

slider அரசியல்

 

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் ஏறக்குறைய பெரியளவு வித்தியாசமின்றி சம அளவில் வெற்றிகளை பகிர்ந்து கொண்டுள்ளன. ஆனால், தி.மு.க. தலைமை பொறுத்தவரை சில மாவட்டங்களில் கட்சியினர் விலைபோய்விட்டதாக எண்ணியுள்ளதாகவும், இதனை முன்னிட்டே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 21.1.2020 அன்று நடைபெற்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில் தவறு செய்தவர்களை தண்டித்தே தீருவேன் என்று பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தி.மு.க.வில் சில மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் விரைவில் நீக்கப்படலாம் என்கிற பேச்சும் பலமாக அடிபடத் தொடங்கியுள்ளது. இது தி.மு.க. முகாமில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, நீலகிரி மற்றும், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இது அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை பெரிதாக பாதிக்கும் என்பதால் தி.மு.க. தலைமை இது குறித்து விவாதிக்க அவசர செயற்குழு கூட்டம் கூட்டியது.

இந்த அவசர செயற்குழு கூட்டம்  21.1.2020 அன்று தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தோல்விக்கு காரணமான மாவட்டங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் சிலருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது தோல்வி குறித்து பேசிய அனைவரும், கட்சியினர் சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என்றும், ஆளுங்கட்சியுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்தனர் என்றும், குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்கள். அதற்கு, மாவட்ட செயலாளர்கள் விளக்கம் அளித்தனர்

 

இதன்பின்னர் அவசர செயற்குழுவுக்கு தலைமை வகித்த ஸ்டாலின்  பேசினார்.  அப்போது ஸ்டாலின், ‘’கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட தோல்வி தான் காரணம். உள்ளாட்சி தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் தி.மு.க. தோல்வி கண்டிருக்கிறது. இனி இது குறித்து விசாரிக்க நேரம் இல்லை. இது தேர்தல் ஆண்டு. எனவே, நடவடிக்கை எடுத்தே தீருவேன். தவறு செய்தவர்கள் மீது நடவடிகை எடுக்கும்போது அவர்களுக்கு ஆதரவாக யார் குறுக்கே வந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன். இது அவசர செயற்குழு என அறிவித்து விட்டு ஒரு வாரம் கழித்து நடத்துவதால் அவசர செயற்குழுவாக எப்படி கருத முடியும் என, நினைக்கலாம். ஆனால், இதுவும் அவசிய, அவசர செயற்குழு தான். இன்னும் 15 மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. அனைவரும் தேர்தல் பணிகளுக்கு ஆயத்தமாக வேண்டும்’’ என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது மூலம் ஓர் உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது. அது என்னவென்றால், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் அளவில்கூட சிலர் ஆளும் கட்சியினருடன் சேர்ந்து தி.மு.க.வை தோற்கடித்துள்ளனர் என்கிற தகவல். முன்பு அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த காலங்களில் அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்கள் என்றால் உடனடியாக அந்த நபர் நீக்கப்படுவார். ஸ்டாலின் அவசர செயற்குழுவில் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை தண்டித்தே தீருவேன் என்று பேசியுள்ளார். இதன்படி ஸ்டாலின் எடுக்கப்போகும் நடவடிக்கை ஜெயலலிதா போன்ற இருக்கப் போகிறதா? அல்லது ஸ்டாலினுக்கேயுரிய முத்திரை பதிக்கப் போகிறாரா? என்பது இன்னும் கொஞ்சநாளில் தெரியவரும்.

  • விசாகன்