பா.ஜ.க.வை கூட்டணியை விட்டு வெளியேற்ற அ.தி.மு.க. புது பிளான்!

slider அரசியல்

 

eps-ops

 

 

அ.தி.மு.க. பொறுத்தவரை வேலூர் இடைத் தேர்தலிலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களுக்கு விழும் முஸ்லிம் ஓட்டுக்கள் கூண்டோடு காலியானதிலிருந்தே பா.ஜ.க.வுடன் கூட்டணியை விட்டுவிடும் முடிவுக்கு வந்துவிட்டது என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இது குறித்து இரட்டை தலைமைகளான முதல்வரும், துணை முதல்வரும் வாய்திறந்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லை என்றாலும், அடுத்தகட்ட அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க. உறவை விமர்சித்தே வருகிறார்கள். இந்நிலையில் (21.1.2020) சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க வெளியேறும் என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் எல்லா மாவடங்களிலும் நடைபெற்று  வருகிறது. இதன்படி  சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோவில் அருகே இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட அமைச்சரான பாஸ்கரன் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் பாஸ்கரன் பேசும்போது, ’’சிவகங்கை மாவட்டம் எப்போதும் பின் தங்கிய மாவட்டம். இந்த ஆட்சியில் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குடிமராமத்து பணிகள் மூலம் இளையான்குடி நகர் ஒன்றிய பகுதிகளில் தண்ணீர் தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளார். இஸ்லாமியர்கள் என்னிடம் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மனு அளித்தனர். இஸ்லாமிய சமுதாய மக்கள் நடந்து முடிந்த எந்த தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை. இருந்தாலும் அ.தி.மு.க. அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் திட்டங்களையும் இன்று வரை செய்து வருகிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம். அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இணைய வாய்ப்பு உள்ளது. அப்படி இணைந்தால் இஸ்லாமிய மக்களாகிய நீங்கள் தி.மு.க.வுக்கு வாக்களிப்பீர்களா? அல்லது அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பீர்களா? இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு அ.தி.மு.க. என்றும் உறுதுணையாக இருக்கும்’’ என்று பேசியுள்ளார்.

அ.தி.மு.க.வின் சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக பல தொகுதிகளில் முஸ்லீம்கள் இருந்து வருகிறார்கள். இவர்கள் ஓட்டுக்கள் அ.தி.மு.க.வுக்கு அதிகளவில் விழும். இந்த ஓட்டுக்கள் மூலம்தான் சட்டமன்ற வெற்றியும், அதன் பலமும் ஆளுங்கட்சியாக மீண்டும் அ.தி.மு.க.வை கொண்டுவர உதவும் என்பதை அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை உணர்ந்துள்ளதும், இதற்காக அமைச்சர் உட்பட சில முக்கிய நிர்வாகிகளை அவர்களே திட்டமிட்டு பேசவைக்கின்றனரோ என்கிற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. ஆகவே, இந்த விவகாரம் முற்றும்போது இதனையே ஒரு காரணமாக்கி பா.ஜ.க.வுடனான உறவை அ.தி.மு.க. முறித்துக் கொள்ளும் என்றும், அனேகமாக இந்த நிகழ்வு அடுத்தாண்டு வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே நடந்திட அதிக வாய்ப்புள்ளதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

 – எஸ்.எஸ்.நந்தன்