பா.ஜ.க. தலைவராக நட்டாவை கொண்டு வந்தது ஏன்!

slider அரசியல்
modi-natta-amithsha

 

பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக, செயல் தலைவர் பதவியில் இருந்துவந்த நட்டா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவரது முழுபெயர் ஜெகத் பிரகாஷ் நட்டா. இவரது நியமனம் குறித்து பல்வேறு தகவல்கள் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி இந்த நியமனம் மூலம் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை மீண்டும் நிரூபித்துள்ளார் என்றும், சமீபமாக பெருகிவந்த அமித்ஷா செல்வாக்கை கொஞ்சம் குறைக்க இது உதவும் என்று பிரதமர் மோடி எண்ணியதும் அடங்கும் என்று சில தகவல்களும் இந்த நியமனத்துக்கு பின்னால் பேசப்படுகின்றன. பா.ஜ.க.வின் தேசிய தலைவராகியுள்ள நட்டா மீது கட்சிரீதியாக சவால்கள் போன்று ஏகப்பட்ட பொறுப்புகளும், கடமைகளும் காத்திருக்கின்றன என்கிற கருத்திலும் பேசப்படுகிறது.

பா.ஜ.க. தலைவராகியுள்ள நட்டா பற்றிய விபரங்கள்:

கடந்த 1993-ம் ஆண்டில் முதல் தடவையாக இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2012-ம் ஆண்டு வரையில் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அவர், இரண்டு முறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். 1990-ம் ஆண்டுகளில் இமாச்சல பிரதேச மாநில பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளராக மோடி பணியாற்றுகையில், நட்டாவுக்கும் அவருக்கும் இடையே வலுவான நட்பு உருவானது. 2010-ம் ஆண்டில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக நிதின் கட்கரி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நட்டா தேசியப் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து 2012-ம் ஆண்டில் நட்டாவை மாநிலங்களவைக்கும் அனுப்பி வைத்தார் கட்கரி.

மேலும்,  மோடியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அவருடைய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இடம்பெற்றிருந்தார் நட்டா. அவர் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்தபோதுதான் ’ஆயுஷ்மான் பாரத்’ என்ற பெயரில் ஏழை மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  அறிவிக்கப்பட்டது. விரைவிலேயே மீண்டும் கட்சிப் பணி என்று உத்தர பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டபோது உற்சாகமாகச் சென்றார் நட்டா.   உத்தர பிரதேசத்தில் 2019 மக்களவைத் தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நட்டா, அதை வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டினார். மோடி, ஷா இருவரின் நம்பிக்கையைப் பெறவும் அது காரணமாயிற்று. அந்த நம்பிக்கையே 2019 ஜூன் மாதம் முதல் பாஜகவின் செயல் தலைவராக நட்டா நியமிக்கப்படுவதற்கும் காரணமாயிற்று. இப்போது தேசிய தலைவராக உயர்ந்துள்ளார்.

கட்சியும், ஆட்சியும் மோடி, அமித்ஷா கைக்கு போனதிலிருந்து பா.ஜ.க.வில் முடிவெடுக்கும் இடத்திலிருந்து பிராமண சமூகத் தலைவர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுகிறார்கள் என்கிற குறை கட்சிக்குள் இப்போதுவரை புகைந்து கொண்டிருக்கிறது.   நட்டாவின்  தேர்வு மூலம் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்படும் என்று பிரதமர் மோடி கணக்கு போட்டதும் ஒரு காரணம் என்கிறார்கள். மேலும், சமீபமாக, அதுவும் காஷ்மீர் பிரிப்பை உள்துறை அமைச்சர் என்கிற முறையில் அமித்ஷா தாக்கல் செய்து நிறைவேற்றியது மூலம் அவரது செல்வாக்கு நாளும் உயர்ந்து கொண்டே சென்றது. இது ஒருகட்டத்தில் பிரதமருக்கு இணையாக வந்துள்ளதாகவு, இது பிரதமருக்கான தனி அதிகார செல்வாக்கை பாதிக்கும் ஒன்றாக மாறவும்கூடும் என்று மத்திய உளவுத்துறை பிரதமருக்கு கொடுத்த அறிக்கையின்படியும் நம்பிக்கைகுரிய ஒருவராக தனக்கு அமித்ஷா இருக்கின்றபோதும் தன் அளவுக்கு அவரின் வளர்ச்சியை கொஞ்சம் குறைக்கவும், கட்சித் தலைவராக நீட்டிக்க தேசிய செயற்குழுவை கூட்டி மீண்டும் அமித்ஷாவை கொண்டுவர வழிகள் இருந்தபோதும் அதை செய்யாமல் பிரதமர் மோடி தட்டிக் கழித்துள்ளதையும் சொல்கிறார்கள். இன்னும் வெளியில் தெரிய வராத ஒரு சில காரணங்களாலும் இந்த முடிவை பிரதமர் எடுத்துள்ளார் என்றும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

  • குருபரன்