தொடரும் உதயநிதியின் ரஜினி மீதான விமர்சனம்!

slider அரசியல்
udhyanithistalin

 

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்றுவரும் முக்கியமான அரசியல் சர்ச்சையாகவும், மோதலாகவும் மாறியுள்ளது பெரியார் குறித்து துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கள். இதற்கு. தி.மு.க. மற்றும் திராவிட அமைப்புகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கு நேற்று (21.1.2020)  ‘பெரியார் குறித்த தனது பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை’ என்று அதிரடியாக பதிலளித்தார் ரஜினி. இந்நிலையில் தி.மு.க. இளைஞரணிச் செயலாளரான உதயநிதி அளித்த கேள்வி- பதிலில் ரஜினி குறித்து சொலியிருப்பது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

இன்று (22.1.20200) தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விகளும், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்களும்.

பெரியார் பற்றிய சர்ச்சை கருத்துக்கு ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறி விட்டாரே?

“அது அவருடைய கருத்து. தி.மு.க தலைவர் கண்டனம் தெரிவித்துவிட்டார். வீரமணி ஐயா கோர்ட்டுக்கு,  ‘சென்று ரஜினியின் கருத்து தவறு என்பதை நிரூபிப்போம்’ என்று சொல்லிவிட்டார். ஏற்கனவே ஒரு பத்திரிகை இதை செய்தியாக்கி பின்னர் மன்னிப்பு கேட்டது. அதே நிலை ரஜினிக்கும் ஏற்படும்.”

முரசொலி குறித்து ரஜினி பேசியது பற்றி?

“முரசொலி விழாவுக்கு நான் தான் அவரை நேரில் சென்று அழைத்தேன். அவருக்கு தி.மு.க நடத்தும் பத்திரிகை முரசொலி என்று தெரிந்திருக்கிறது. அ.தி.மு.க நடத்தும் பத்திரிகை துக்ளக் என்று நினைத்து சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன். இதை விட்டுவிடுங்கள். இலவசமாக விளம்பரம் கொடுத்துள்ளார்கள்.”

சினிமா சங்கங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றது பற்றி?

“நமது நாட்டில் பாராளுமன்றத்துக்கே எளிதில் தேர்தல் நடத்திவிட முடிகிறது. 3 ஆயிரம் ஓட்டு கூட இல்லாத நடிகர் சங்க தேர்தலுக்கு பதிவான ஓட்டுகளை எண்ண கூட முடியவில்லை. முக்கிய சங்கங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்வது சினிமாவுக்கு ஆரோக்கியம் இல்லை. விஷால் எனது தந்தையை சந்தித்தார் என்பதற்காகவே பழிவாங்கப்படுகிறார். அவரை பழி வாங்குவதாக நினைத்து சங்கங்களையும் கைப்பற்றி முடக்கி விட்டார்கள். விஷால் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் அவர்கள் நோக்கம்.”

அரசியல் படங்கள் வந்தால் நடிப்பீர்களா?

“கதையையும் இயக்குநரையும் பொறுத்து முடிவெடுப்பேன்.”

அரசியலுக்கு வந்த பிறகு எதிரிகள் அதிகமாகி விட்டார்களா?

“சினிமாவிலும் எதிரிகள் இருப்பார்கள். உள்ளே பகையை வைத்து வெளியே சிரித்து பழகுவார்கள். அதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.”

தாத்தா வாழ்க்கையை படமாக்குவீர்களா?

“அவர் உயிரோடு இருக்கும்போதே நான் ஆசைப்பட்டேன். என்னை வைத்து எடுக்க முயற்சி எடுத்தார்கள். நான் விளையாடுகிறீர்களா? என்று கேட்டேன். இப்போது சிலர் இணைய தொடருக்காக அணுகியுள்ளார்கள். சரியான குழு அமைந்தால் நடக்கும்.”

சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

“முதலில் ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல் நடத்தட்டும். பார்க்கலாம். அதை கட்சி தான் முடிவெடுக்க வேண்டும். கட்சி சொன்னால் தேர்தலில் நிற்பேன். அது எந்த தேர்தலாக இருந்தாலும்.”

டுவிட்டரில் ரஜினியை தொடர்ந்து விமர்சிப்பது ஏன்?

“நான் பொதுவாக சொல்லும் கருத்தை ரஜினியுடன் தொடர்பு படுத்திக்கொள்கிறார்கள். அவரை குறிப்பிடவே இல்லையே…  முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். அதன் பின் அவருக்கு பதில் தருகிறேன்.”

சட்டமன்ற தேர்தலில் ரஜினியை எதிர்த்து களம் இறங்குவீர்களா?

“தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. கட்சி கட்டளையிட்டால் போட்டியிடுவேன். ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். பின்னர் பார்க்கலாம். கட்சி சொன்னால் யாரை எதிர்த்தும் போட்டியிடுவேன்.”

கலைஞருக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்ற கோரிக்கை?

“கலைஞருக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அது விருதுக்கு தான் பெருமை. அவர் அத்தனை சாதனைகளை செய்து இருக்கிறார். கட்சி சார்பில் இது தொடர்பாக பரிசீலிக்கப்படும்.”

கடந்த சில மாதங்களாக, குறிப்பாக தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்தே பல்வேறு விஷயங்களுக்கு ரஜினி அளிக்கும் பதிலுக்கு உதயநிதி எதிர்த்தும், கிண்டலடித்தும் போட்டுவரும் டுவிட்டர் பதிவுகள் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. அதேநேரத்தில் முரசொலி பவளவிழாவில் ரஜினி கலந்தும் கொண்டார். இதன்பிறகும் ரஜினியை கிண்டலடித்து உதயநிதி பல ட்வீட்டுக்களை பதிவிட்டுள்ளார். இப்போது பெரியார் குறித்த ரஜினி விமர்சனத்திலும் எதிராகவும், கிண்டல் தொனியிலும் தொடர்ந்து உதயநிதி ட்வீட் செய்து வருகிறார். இந்நிலையில் தான் ஒருவேளை ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன் என்கிற பொருளில் பேசியுள்ளார்.  உதயநிதியின் இந்த பேச்சும் வரும் நாள்களில் நிச்சயம் பரபரப்பைக் கிளப்பலாம்.

  • தொ.ரா.ஸ்ரீ.