கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு எதிராக வெகுண்டெழும் ஈழத் தமிழர்கள்!

slider அரசியல் உலகம்

 

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரின்போது ஏறக்குறைய லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்த நீதி விசாரணை வேண்டி புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஐ.நா. மன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கடந்த முப்பது ஆண்டுகளில் இலங்கை ராணுவத்துடன் விடுதலைப்புலிகள் நடத்திய போரில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட போராளிகள் இலங்கை ராணுவத்தின் கட்டுபாட்டில் தற்போதுவரை இருந்து வருவதாகவும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கடந்த பத்து ஆண்டு காலமாக ஈழத் தமிழர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இறந்துவிட்டதாக தற்போதைய இலங்கை அதிபர் கோத்தபய
ராஜபக்‌ஷே அறிவித்துள்ளார். இது இலங்கை மட்டுமல்ல உலகமெங்குமுள்ள தமிழர்களை பெருத்த அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக போர் நீடித்தது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகினர். ‘மாயமானவர்கள் இலங்கைப் பாதுகாப்புப் படைகளிடம் உயிருடன் இருப்பர்’ என இவர்களது உறவினர்கள் இதுவரை நம்பி வந்தனர். ‘மாயமானவர்களின் உண்மை நிலை என்னவென்று அரசு அறிவிக்க வேண்டும்’ எனக்கூறி,  இவர்களது உறவினர்களும் சில மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.

இந்நிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில், ஐ.நா.வின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்கருடன், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு  நிகழ்ந்தது.

இது குறித்து இலங்கை அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்த போரில் மாயமானவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். அவர்கள் போரில் இறந்துவிட்டனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை. இதனால், மனித உரிமை அமைப்புகளும், மாயமானவர்களின் உறவினர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கெனவே இறுதிபோரில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்காக ஒரு நீதி போராட்டம் ஐ.நா.வில் நடைபெற்று வருகிறது. இப்போது இந்த 20,000 போராளிகள் உயிருடன் இல்லை என்கிற இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் இப்போதைய அறிவிப்பும் பெரும் கொந்தளிப்பை உலகமெங்குமுள்ள ஈழத் தமிழர்களிடமும், தமிழகத்திலுள்ள தமிழர்களிடம் நிச்சயம் ஏற்படுத்தும். இதற்கான பின்விளைவுகள் என்பது ஐ.நா.வின் கையில் உள்ளது என்கிறார்கள் இன அழிப்பு குறித்து ஆய்வு செய்துவரும் சர்வதேச வல்லுனர்கள்.

  • எஸ்.எஸ்.நந்தன்